நஸ்ரியா..
தமிழ் , மலையாளம் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நஸ்ரியா நசீம். இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். திரையுலகில் உச்ச நடிகையாக இருப்பவர்கள் எல்லாம் இப்போதைக்கு திருமணம் வேண்டாம், பட வாய்ப்புகள் குறையும் பொழுது திருமணம் செய்து செட்டில் ஆகிவிடலாம் என கணக்குப்போட்டுதான் பயணிப்பார்கள்.ஆனால் அதற்கெல்லாம் முரணாக கடந்த 2014 ஆம் ஆண்டு நஸ்ரியா பகத்தை திருமணம் செய்துக்கொண்டார்.
அப்போது அவரை தங்கள் படத்தில் கமிட் செய்ய ஏகப்பட்ட இயக்குநர்கள் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ‘நேரம்’ திரைப்படம் மூலம் நஸ்ரியா அறிமுகமானார். முதல் படம் முதலே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றன. அதன் பிறகு ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘ராஜா ராணி’ போன்ற சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் நஸ்ரியா ஆர்வம் செலுத்தவில்லை.
'அன்டே சந்தரானிக்கி'. ..
திருமணத்துக்கு பின்னர் அவ்வப்போது சினிமாவில் முகத்தைக் காட்டிய நஸ்ரியா, தற்போது நேரடி தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். நானியுடன் 'அன்டே சந்தரானிக்கி' என்ற பெயரில் உருவாகியுள்ள படத்தின்மூலம் நஸ்ரியா மீண்டும் சினிமாவில் கால்பதித்துள்ளார். ஜூன் 10ல் வெளியாகவுள்ள இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாகியுள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் படம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய நஸ்ரியா தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்தும் சினிமா வாழ்க்கைகுறித்தும் பேசினார்.
கணவரின் விருப்பம்...
நானும் பகத் பாசிலும் பெங்களூர் டேஸ் படத்தில் ஒன்றாக நடித்தோம். எங்களுக்கு இடையே காதல் உருவானது. முதலில் காதலைச் சொன்னது நான் தான். பெற்றோரும் ஏற்றுக்கொண்டதால் இது திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பின்னர் நான் சினிமாவை விட்டு விலகினேன். ஆனால் கணவர் பகத்தான் நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்று விரும்பினார்.என்னை சினிமாவில் மீண்டும் நடிக்கச் சொன்னார். அதன்பிறகே கதைகளைக் கேட்டு நடிக்க வந்துள்ளேன் எனக் குறிப்பிட்டார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த நஸ்ரியா, நல்ல காதல் நிறைவேற வேண்டுமென்றால் வீட்டில் முரண்டு பிடியுங்கள் எனக் குறிப்பிட்டார்.