மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் கிராமம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி ராமசாமி. இவருக்கு சிற்றரசன், சுமதி, தீபா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் சிற்றரசன் மற்றும் சுமதி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் கடைசி மகளான திருமண ஆகாத 26 வயதான தீபா இளங்கலை அறிவியல் பட்டதாரி ஆவார். இந்நிலையில் இவருக்கு செம்பதனிருப்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபா தெருவில் உள்ள குழாயில் குடி தண்ணீர் பிடிப்பதற்கு பாமா வீட்டை கடந்து சென்றுள்ளார். அப்பொழுது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரும் தீபாவிடம் தகராறில் ஏற்பட்டுள்ளனர்.
இதில் பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இருவரும் தீபாவிடம் உன்னைப்பற்றி திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாக கூறி உனது திருமணத்தை நிறுத்தி விடுவோம் எனவும், வேறு யாரும் உன்னை திருமணம் செய்ய வராதவாறு செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீபா தண்ணீர் பிடிக்காமல் வீட்டுக்கு திரும்பி வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளியில் சென்று வீடு திரும்பிய தீபாவின் தாய் கலாவதி அதிர்ச்சி அடைந்து. இது தொடர்பாக பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இருவர் மீதும் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட புதுப்பட்டினம் காவல்நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபாவின் உடலைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொரோனா வைரஸ் பெரும் தொற்றின் காரணமாக உலகமே அடுத்த நாள் நாம் கண்விழிப்போமா என்ற அச்சத்தில் உறைந்து போய் உள்ள நிலையில், சக மனிதர்கள் சக மனிதர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் இந்த வேளையில், வாழும் வயதில் திருமணம் நடந்து குடும்பத்துடன் வாழவேண்டிய இளம் பெண்ணிடம் சண்டையிட்டு தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050