சென்னை, திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ளது எஸ்.பி.கோவில் தெரு. இங்கு வசித்து வருபவர் ரேவேந்திரன். அவருக்கு வயது 37. இவரது தாயார் ரேணுகா. இவர் நேற்று முன்தினம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்புவிடுத்து, தனது வீட்டில் இளம்பெண் ஒருவர் தகராறு செய்வதாக கூறியுள்ளார்.


இதையடுத்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் இருந்து ஏட்டு சரவணன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது, செல்வி என்ற பெண் ரேணுகாவிடமும், அவரது குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த பெண்ணை சரவணன் கண்டித்துள்ளார். ஆனாலும், அந்த பெண் சரவணனின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து ரேணுகாவின் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.




இதனால், ஏட்டு சரவணன் செல்வியின் நடவடிக்கையை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதைப்பார்த்த செல்வி செல்போனில் வீடியோ எடுப்பதை தடுக்க முயற்சித்துள்ளார். ஆனாலும், சரவணன் வீடியோ எடுத்ததால் செல்வி சரவணனின் வலது கையை கடித்து வைத்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு நபர் வீடியோவாக பதிவு செய்தார். மேலும், ஏட்டு சரவணனின் கையை கடித்த செல்வி போலீஸ் உடை என்றும் பாராமல் அவரது சட்டையை பிடித்து இழுத்தார்.


இதனால், அதிர்ச்சியடைந்த சரவணன் உடனடியாக திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ருக்மணி விரைந்தார். பின்னர், அவர் தகராறில் ஈடுபட்ட செல்வியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.




போலீசார் விசாரணையில் தனியார் வங்கியில் பணியாற்றி வரும் ரேவந்திரனும், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவருமான செல்விக்கு (வயது 32) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இரு வீட்டார் பெற்றோர்களும் செல்விக்கும், ரேவந்திரனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.


ஆனால், ரேவந்திரன் குடும்பத்தினர் திருமணத்திற்கு முன்பு 5 சவரன் நகை, பைக் மற்றும் ரூபாய் 1 லட்சம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இவர்களின் திருமணம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான செல்வி ரேவந்திரன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்துள்ளார்.


இந்த சூழலில்தான், செல்வி ரேவந்திரன் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டபோதுதான் ஏட்டு சரவணனின் கையை கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. செல்வி மீது தகாத வார்த்தைகளில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அத்துமீறி உள்ளே நுழைதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீஸ் ஏட்டு கையை இளம்பெண் கடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.