விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் பெட்ரோல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பெட்ரோல் நிலைய மேலாளரான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 26) மற்றும் சில ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது அங்கு விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் காலனியை சேர்ந்த 4 வாலிபர்கள், 2 மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் நிரப்ப வந்தனர். அவர்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர்களது 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் அங்கிருந்த ஊழியர்கள், பெட்ரோல் நிரப்பினர். ஆனால் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களை நகர்த்தாமல் நீண்ட நேரம் அங்கேயே நின்றுள்ளனர்.


உடனே அங்கு வந்த பெட்ரோல் நிலைய மேலாளர் கார்த்திக், மோட்டார் சைக்கிள்களை நகர்த்தும்படி அந்த வாலிபர்களிடம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அருண்குமார், இளஞ்செழியன், ஹரிராமன் ஆகிய 3 பேரும் அந்த வாலிபர்களை தடுக்க முயன்ற போது அவர்களும் தாக்கப்பட்டனர். மேலும் குடிபோதையில் நிதானமின்றி இருந்த அந்த 4 வாலிபர்களும் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும் எந்திரங்கள், பம்புகள் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினர். அதோடு இருகில் இருந்த மற்ற பொருட்களையும் உடைத்து சூறையாடினர். இவர்களின் இந்த அராஜக செயல்களால் அங்கு பெட்ரோல்- டீசல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகள், அதனை நிரப்பாமல் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து அவசர, அவசரமாக வேறு பெட்ரோல் நிலையத்திற்கு பறந்துசென்றனர்.




இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் அந்த பெட்ரோல் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் அந்த போதை வாலிபர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதோடு அந்த பெட்ரோல் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.




மேலும், இதுகுறித்து பெட்ரோல் நிலைய மேலாளர் கார்த்திக், தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கண்டம்பாக்கம் காலனியை சேர்ந்த பிரபா, தீனா உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.  இதனிடையே பெட்ரோல் நிலைய மேலாளர், வாடிக்கையாளர்களை போதை வாலிபர்கள் தாக்கி பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய சம்பவம் வீடியோவாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண