விளாத்திகுளம் அருகே ஆன்லைன் ரம்மியால் கடனில் சிக்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த இராமலக்ஷ்மணன் என்பவரின் மகன் பூபதிராஜா(27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பவர் பிளான்ட்டில் பணிபுரிந்து கொண்டும், சிறு சிறு எலக்ட்ரிக்கல் வேலைகளை செய்தும் வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி இரவுநேர பணிக்கு சென்று விட்டு மறுநாள் 23-ஆம் தேதி காலை வீட்டிற்கு வந்தவர், அருகிலுள்ள சிப்பிக்குளத்திற்கு எலக்ட்ரிக்கல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.




வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், பூபதிராஜாவின் செல்போனுக்கு பெற்றோர் அழைப்பு விடுத்தும் பூபதிராஜா அழைப்பை எடுக்காததால், அவரை தேட தொடங்கியுள்ளனர். அப்போது அதே கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் சென்று பார்த்தபோது, அங்கு பூபதிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவரது குடும்பத்தினர் கதறி அழுது உள்ளனர். பின்னர், தகவலறிந்த குளத்தூர் காவல் நிலைய போலீசார் அக்கிராமத்திற்கு சென்று தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த பூபதி ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பூபதி ராஜாவின் கைப்பேசியையும் கைப்பற்றிய போலீசார் அவரது குடும்பத்தினரிடம்  தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். 




இதனைத்தொடர்ந்து போலீசார் பூபதிராஜாவின் கைபேசியை ஆய்வு செய்ததில், அதில் "ஆன்லைன் ரம்மி ஆப்" இருந்ததும், அடிக்கடி அதில் பூபதிராஜா விளையாடியதும் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை செய்ததில், அவரது பெற்றோரும், சகோதரரும் கூறுகையில், பூபதி ராஜா அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டே இருப்பார் என்றும் தாங்கள் எவ்வளவு கூறியும் சூதாட்டத்தை நிறுத்தவில்லை என்றும் கூறியுள்ளனர். 


அதுமட்டுமின்றி, பூபதி ராஜா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது பெற்றோருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை உருக்கமாக பேசி அனுப்பி உள்ளார். அதிலும் பூபதி ராஜா வாய்ஸ் மெசேஜ் உடனே சென்று விட்டால் தன்னை காப்பாற்றி விடுவார்களோ என்று எண்ணி செல்போன் இன்டர்நெட்டை ஆஃப் செய்து வைத்து வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். பின்னர் போலீசார் அவரின் கைபேசியை ஆய்வு செய்தபோது இன்டர்நெட்டை ஆன் செய்தவுடன் பூபதி ராஜா கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் அவரின் பெற்றோரின் கைப்பேசிக்கும், சகோதரரின் கைபேசிக்கும் சென்றுள்ளது. அந்த ஆடியோவை கேட்ட அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.




பூபதி ராஜா பேசிய அந்த ஆடியோவில்,  ‘என்ன மன்னிச்சிடுமா... நான் ஏகப்பட்ட கடன் வாங்கிட்டேன்.. உன் செயின் ஒன்னையும் அடகு வச்சுட்டேன் 40,000 ரூபாய்க்கு... ஒன்றரை லட்சம் லோன்ல நான் 30,000 ரூபாய் எடுத்திருக்கேன், அதுபோக இந்த மாசம் லோனுக்கு டியூ 6000 ரூபாயை எடுத்த செலவு பண்ணிட்டேன், அதையும் நான் தான் கட்டணும்...., அதுபோக கம்பெனியில ஒரு பையன்கிட்ட 2000 ரூபாய் வாங்கியிருக்கேன்.. அதையும் குடுக்கல... இந்த மாசம் சம்பளமும் செலவு பண்ணிட்டேன்.... மன்னிச்சிரு’ என்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமாக பேசியுள்ளார்.




இது பற்றி அவரது குடும்பத்தினர் கூறுகையில், தனது மகன் பூபதி ராஜா அடிக்கடி செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டே இருப்பார் என்றும், அவர் பேசிய அந்த ஆடியோவை கேட்ட பின்பு தான் இவ்வளவு கடன் வாங்கி இருக்கிறார் என்றும் தெரியவந்ததுள்ளது. அதுபோக தங்களுக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 32 கிராம் (4பவுன்) செயினையும் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தூத்துக்குடி இந்தியன் பேங்கில் 40 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து ஆன்லைன் ரம்மியில் விளையாடி இழந்துள்ளார். அதேபோல் வேலை செய்யும் இடத்திலும், ஊரில் உள்ள பலரிடமும் கடன் வாங்கி உள்ளார். இதனால் தன் மகன் இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரைப் போல் இனி யாரும் இந்த ஆன்லைன் ரம்மியால் உயிர் இழக்கக்கூடாது அதற்கு அரசு உடனடியாக இந்த விளையாட்டை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க பூபதிராஜாவின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.