சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு காப் பஞ்சாயத்தில் தோப்புக்காரணம் போடும் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப் பஞ்சாயத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக சிறுமியிடம் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி தனது கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்ற அந்நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தொடர்ந்து கையும் களவுமாக பிடிபட்ட நபரை அக்கிராம காப் பஞ்சாயத்தில் மக்கள் நிறுத்திய நிலையில், வழக்கை விசாரித்த பஞ்சாயத்துத் தலைவர்கள், அந்நபரை 5 முறை அனைவர் முன்னிலையில் தோப்புக்காரணம் போடும்படி தண்டனை வழங்கியுள்ளனர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட வேண்டிய, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தோப்புக்காரணம் போடுமாறு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னதாக இச்சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், கிராமப்புற இந்தியாவில் நிலவில் வரும் ஆணாதிக்கம் மற்றும் அநீதிகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என வீடியோவைப் பகிர்ந்து இணையவாசிகள் கடுமையாக சாடி வருகின்றனர்.
மேலும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார். துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரைக் குறியிட்டு இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்தும், குறிப்பிட்ட நபர் மற்றும் பஞ்சாயத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், இந்தக் குற்றத்தை மறைக்க முயன்றவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் நவாடா மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் மங்லா தெரிவித்துள்ளார்.
காப் பஞ்சாயத்துகள் சட்டவிரோதமானவை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்ததுள்ள நிலையில், சாதி அல்லது சமூகம் சார்ந்த குழுக்களாக உள்ள காப் பஞ்சாயத்துகள், பெரும்பாலும் வட இந்தியாவின் கிராமப்புறங்களில் தொடர்ந்து சட்டவிரோதமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Marriage Bill : இது வரலாறு.. 'லவ் இஸ் லவ்'...அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட தன்பாலின திருமண மசோதா..