திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கிராமம் கள்ளிமேடு. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அவரது மகள் சாதனா. 20 வயதான சாதனா 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது அப்பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வசூல் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த வாரம் பணி நிமித்தமாக அருகில் உள்ள தீபாமங்கலம் கிராமத்திற்கு சென்றுள்ளார். அந்த கிராமத்தில் சாதனாவின் தூரத்து உறவினர்களான இளையபாரதி மற்றும் கிரிஜா தம்பதியினர் அவர்களது 2 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றனர்.
இதையடுத்து, அவர்களை கண்டு நலம் விசாரித்த சாதனா அவர்களின் 2 வயது குழந்தையை ஆசையுடன் தூக்கி கொஞ்சியுள்ளார். பின்னர் குழந்தையை இளையபாரதி மற்றும் கிரிஜா தம்பதியினரிடம் அளித்துள்ளார். அப்போது அந்த குழந்தையின் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க சங்கிலியை காணவில்லை என்று குழந்தையின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். மேலும், அந்த சங்கிலியை சாதனாதான் திருடியதாகவும் இளையபாரதியும், அவரது அண்ணன் ஐயப்பனும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால், பதறிப்போன சாதனா தான் அந்த நகையை திருடவில்லை என்று கூறியுள்ளார். ஆனாலும், அவர்கள் சாதனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இதனால் மனம் உடைந்த சாதனா அழுதுகொண்டே தான் திருடவில்லை என்று கூறியுள்ளார். ஆனாலும், அந்த குழந்தையின் பெற்றோர்கள் சாதனாவின் தந்தையான செந்தில்குமாருக்கு போன் செய்து சாதனா தங்கசங்கிலியை திருடிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சாதனாவின் பெற்றோர்களையும் சகட்டுமேனிக்கு வசைபாடியுள்ளனர். இதனால் அந்த இடத்தில் இருந்து அவமானம் தாங்க முடியாமல் சாதனா திரும்பியுள்ளார். நேரடியாக தனது வீட்டுக்கு செல்லாமல் அய்யம்பேட்டையில் உள்ள தனது உறவினர்களின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கு யாருக்கும் தெரியாமல் கடையில் எலி மருந்தை வாங்கி தன்னையும், தன் பெற்றோர்களையும் அவதூறாக பேசிவிட்டனர் என்ற அவமானம் தாங்க முடியாமல் எலி மருந்தை குடித்து விட்டார்.
மாலை 5 மணியாகியும் சாதனா வீட்டுக்கு வராததால் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட தந்தையிடம் தான் அய்யம்பேட்டையில் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர், அய்யம்பேட்டைக்கு சென்ற தந்தை செந்தில்குமார் மகள் சாதனாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் சாதனா வாந்தி எடுத்துள்ளார். இதனால், பதற்றமடைந்த சாதனாவின் பெற்றோர்கள் உடனடியாக அவரை நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சாதனா, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருட்டுப் பழியால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனது மகள் சாதனாவை தற்கொலைக்கு தூண்டியதாக இளையபாரதி மற்றும் ஐயப்பன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் ஐயப்பன் மற்றும் இளையபாரதியை போலீசார் கைது செய்தனர். எந்தவொரு சிக்கலுக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. தற்கொலை போன்ற தவறான எண்ணங்கள் ஏற்பட்டால் உடனடியாக மனநல மருத்துவரை சந்தித்து தகுந்த ஆலோசனை பெற வேண்டும்.