ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல் உலகப் புகழ்பெற்றவர்கள் மத்தியில் உலகமே தேடும் குற்றவாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த 10 பேரும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால், இவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே தொடர்பு குற்றம். அதுவும் சாதாரண குற்றமல்ல குலைநடுங்க வைக்கும் குண்டுவெடிப்புகள், கிரிமினல் சதிகள், கொலை, கொள்ளைகள், தீவிரவாதம் எனப் பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம். அந்தப் பத்து பேரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் உங்களின் ஆவல் அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. இதோ பட்டியலிடுகிறோம்:
10.அய்மான் அல் ஜவாஹிரி
அய்மான் அல் ஜவாஹிரி. இவர் எகிப்தின் கெய்ரோ நகரைச் சேர்ந்தவர். எகிப்தில் உள்ள இஸ்லாமிய ஜிகாத்திக்களின் தலைவர். இவர் பின்னாளில் தன்னை அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் இணைத்துக் கொண்டார். ஒசாமா பின் லேடனின் வலதுகை என்ற பெயர் கூட இவருக்கு உண்டு. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தைத் தாக்கிய சதியின் மூளையாகச் செயல்பட்டவர்களுள் இவரும் ஒருவரும். செப்டம்பர் 11 தாக்குதலை அமெரிக்கா என்றுமே மறக்காது. ஏன், உலகமும் கூடத்தான். அந்தக் கொடூர தாக்குதலை அரங்கேற்றிய குற்றத்துக்காக அய்மான் அல் ஜவாஹிரி இன்றளவும் உலகம் தேடும் நபராக இருக்கிறார்.
9.ஒமீத் தாவிலி
கனடாவில் இயங்கிய பாரசீக கொள்ளை கும்பலுக்குத் தலைவர் இவர். இவருக்கு சர்வதேச கொள்ளை கும்பல்களுடன் தொடர்புண்டு. கடந்த 2007ம் ஆண்டு இவர் கனடா நாட்டுச் சிறையிலிருந்து தப்பித்தார். அன்றுமுதல் தேடப்படும் நபராக இருக்கிறார். இவர் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் குற்றம், அமெரிக்காவில் திருட்டு என பல குற்ற வழக்குகளில் தேடப்படுகிறார்.
8.ஃபெலீசியன் கபுகா
ஃபெலீசியன் கபுகா, சர்வதேச குற்றவாளிகள் பட்டியலில் இவருக்கு 8வது இடம். இனவாதியான இவர் மீது இனப்படுகொலைக் குற்றச்சாட்டு இருக்கிறது. இவர் கென்யாவில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில் 100 நாட்களில் 8 லட்சம் பேர் உயிரிழந்தனர். இதில் மிகப்பெரிய இனஅழிப்புக் குற்றத்தை செய்திருக்கிறார் ஃபெலீசியன் கபுகா.
7.ஜேம்ஸ் புல்கர்
ஜேம்ஸ் புல்கர் இவர் இந்தப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறார். அமெரிக்காவின் போஸ்டன் நகரின் க்ரைம் நெட்வொர்க் தலைவர். இவர் மீது போதை மருந்து கடத்தல், கொலை, கொள்ளை, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, கொலை சதி என இல்லாத குற்றச்சாட்டே இல்லை என்று சொல்லும் அளவுக்கு புகார்கள் உள்ளன. 19 கொலைகளை செய்திருக்கிறார். கிரிமினல் குற்றங்கள் வாயிலாக 18 மில்லியன் பவுண்ட் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். இவரை சர்வதேச போலீஸார் 33 ஆண்டுகளாகத் தேடி வருகின்றனர்.
6.அலிம்சான் தோத்தக்நோவ்
6வது இடத்தில் இருக்கும் அலிம்சான் தோத்தக்நோவ் இந்தப் பட்டியலில் கூடுதல் கவனம் பெறுகிறார். இவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர். சட்டவிரோத ஆயுதக் கடத்தல், போதை மருந்துக் கடத்தல் மட்டுமல்லாது ஆட்டோமொபைல் திருட்டும் இவரது குற்றப்பின்னணியில் இணைகிறது.
5.ஜோசப் கோனி
உகண்டாவைச் சேர்ந்த கொரில்லா படைத் தலைவன். இவர் தலைமையிலான வன்முறைக் கும்பல் பல கொடுங்குற்றங்களை இழைத்துள்ளது. அத்தனையும் மனிதகுலத்துக்கு எதிரானது. குழந்தைக் கடத்தல், போர்க்குற்றங்களும் இவர் மீது உள்ளன. 1986களில் சூடான், காங்கோவில் பல கொடுங்குற்றங்களைச் செய்தவர். உலகம் தேடும் நபர்கள் பட்டியலில் இவர் 5வது இடத்தில் உள்ளார்.
4.செமியோன் மோகிலெவிச்
உலகின் மிக ஆபத்தான கிரிமினல் என அறியப்பட்ட செமியோன் மோகிவெலிச் கிரிமினல் குற்றவாளிகள் பட்டியலில் 4ம் இடத்தில் இருக்கிறார். ரஷ்ய மாஃபியாக்கள் பலவற்றின் தலைவர் இவர்தான். இவர் மீதும் இல்லாத குற்றங்களே இல்லை.
3.தாவூத் இப்ரஹிம்
சர்வதேச குற்றவாளிகள் பட்டியலில் இந்திய நிழல் உலக தாதா தாவூத் இப்ரஹிம் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவருடைய கூடாரம் டி கம்பெனி என்றழைக்கப்படுகிறது. இது கிரிமினல்களின் கூடாரம். பாகிஸ்தான், இந்தியா, அபுதாபியில் கொலை, ஆள்கடத்தல், போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டது. இவருக்கு அல் கொய்தா அமைப்புடனும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
2.மெட்டோ மெசினா டெனாரோ
பேரு ரொம்ப மிடுக்கா இருக்கே என்று நினைக்காதீர்கள். இவர் சர்வதேச போலீஸாரால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இத்தாலி நாட்டைச் சேர்ந்த மாஃபியாவான இவரை வைத்து காமிக் புத்தகம் இருக்கிறது. இத்தாலியின் காஸா நாஸ்ட்ரா இவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 20 ஆண்டுகளாக இவர் தேடப்படுகிறார்.
1.ஜோக்வைன் குஸ்மேன்
டாப் 10 கிரிமினல்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ஜோக்வைன் குஸ்மேன். இவரை டான் உலகம் ’ஷார்ட்டி’ Shorty” எனச் செல்லமாக அழைக்கிறது. ஆள்கடத்தல், காசுக்கு கொலை, சொத்து அபகரிப்பு இதுதான் இவரின் குற்றச்செயல்கள். 2003ல் இவர்தான் மெக்சிகோவின் போதைப் பொருள் கடத்தல் மன்னன். கடத்தல் கும்பல்களுக்கு எதிரான சண்டையில் இவர் நிகழ்த்தும் கொடூரங்கள் எதிரிகளை மட்டுமல்ல சாமானியர்களையும் குலை நடுங்கச் செய்யும். இரண்டாண்டுகளுக்கு இருந்ததைவிட குஸ்மேன் இப்போது யாரும் நெருங்கமுடியாத அளவுக்கு மிகப்பெரிய கிரிமினலாக வளர்ந்துவிட்டதாக சர்வதேச போலீஸார் கூறுகின்றனர்.