உத்தரகாண்டில் மனைவிக்கு சேலை பிடிக்காததால் கடைக்காரரை கணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பொதுவாக துணிக்கடைக்கு பெண்களுடன் சென்றால் அன்றைய பொழுது அங்கேதான் என்ற காமெடியான கருத்து ஒன்று உண்டு. வாங்குவது ஒரு சின்ன உடையாக இருந்தாலும் அதனைப் பார்த்து பார்த்து வாங்குவார்கள். இதற்காக எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் செலவழிப்பார்கள். இதனை பல படங்களிலும் காமெடி காட்சியாக வைத்திருப்பார்கள். இப்படியான நிலையில் மனைவிக்கு சேலை எடுக்க சென்றபோது கடையின் உரிமையாளரை கணவர் தாக்கிய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. 


அங்குள்ள  உத்தரகன்னடா மாவட்டத்தில் இருக்கும் சிர்சி பகுதியில் முகமது என்ற நபர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சிர்சியின் சி.பி.பஜாரில் உள்ள ஒரு துணிக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு பிடித்த சேலை ஒன்றை மனைவிக்காக வாங்கி ஆசையாக வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால் மனைவிக்கோ அந்த சேலையை பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மீண்டும் அந்த துணிக்கடைக்கு வந்துள்ளார். சேலையை மாற்ற வேண்டும் என உரிமையாளரிடம் தெரிவிக்க, அவரும் சரி என கூறியிருக்கிறார். 


இதனையடுத்து முகமது மனைவி கடையில் உள்ள சேலைகளை பார்த்தும் அவருக்கு எதுவுமே பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடை ஊழியர்களிடம் முகமது வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் நிலைமையை சரிசெய்ய, கடையின் உரிமையாளர் முகமதுவிடம், பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறேன். வாங்கிய சேலையை கொடுத்து விட்டு கடையை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். 


அதற்கு முகமது, நீங்கள் கூறும் விலை எதுவாக இருந்தாலும் அதனை கொடுத்து தான் துணி வாங்க தயாராக உள்ளேன். ஆனால் எனக்கு பிடித்த துணியை நீங்கள் கொடுக்க வேண்டும் என பிடிவாதம் காட்டியுள்ளார். இதனால் உரிமையாளருக்கும், முகமதுவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகமது தனது நண்பரை போன் மூலம் கடைக்கு வருமாறு அழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து துணிக்கடையின் உரிமையாளரை தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக சிர்சி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துணிக்கடையில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் உத்தரகன்னடா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க: கொடூரம்! வீடு புகுந்து 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் - ராஞ்சியில் அதிர்ச்சி