தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்க்கைமுறையை எளிதாக்கிவிட்டது உண்மைதான் என்றாலும், அதனால் சில குற்றச்சம்பவங்களும் பெருகிவிட்டன. அந்த வகையில் ஆப்பிள் ஏர் டேக் மூலம் பெண் ஒருவர் காரில் பின் தொடரப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. ஏர்டெக்கை கண்டுபிடிக்க முடியாததால் விடிய விடிய காரிலேயே அப்பெண் இருந்துள்ளார்.


பணப்பை, பைக் சாவி, கார் சாவி என முக்கிய பொருட்களை எங்காவது வைத்துவிட்டு தேடுவதெல்லாம் பெரிய தலைவலி. இதற்காகத்தான் ஒரு கருவியை கண்டிபிடித்தது ஆப்பிள் . அதுதான் ஏர் டேக்.  இதனை நீங்கள் எந்த பொருளில் வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம். ஏன்.? உங்கள் வீட்டு நாய்க்குட்டியிடம் கூட இணைத்து வைக்கலாம். அது இணைத்து வைக்கப்பட்ட பொருள் எங்காவது காணாமல் போனாலோ, அல்லது வைத்த இடத்தை நாம் மறந்து விட்டாலோ ஏர் டேக் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். செல்போன் செயலி மூலம் அந்த பொருள் இருக்கும் லொகேஷனை கண்டுபிடிக்கலாம். 


ஒருவேளை அந்தபொருள் திருடப்பட்டது என்றால் கடைசியாக எந்த லொகேஷனில் இருந்தது எனக் காட்டும். அதேபோல் உங்கள் ஏர்டேக் தனியாக போய்விட்டால் அதில் உள்ள ஸ்கேனிங்கை பயன்படுத்தி  ஓனரை கண்டுபிடித்துவிடலாம். இப்படி ஒரு பாசிட்டிவ் பக்கம் இருந்தாலும், இந்த டிவைஸை பயன்படுத்தி மற்றவர்களின் ரகசியங்களும் எடுக்கப்பட்டன.




எடுத்துக்காட்டாக உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேக், அல்லது உங்கள் காரில் நான் ஏர் டேக்கை நான் வைத்துவிட்டால் நீங்கள் செல்லும் இடத்தை எல்லாம் எளிதாக தெரிந்துகொள்ளலாம். அப்படித்தான் அமெரிக்க பெண்மணி பின் தொடரப்பட்டுள்ளார். காரில் சென்ற அவருடைய போன் மர்மமான ஏர் டேக் இருப்பதை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்துள்ளது. வாகன நெரிசலின் போதோ கூட்டத்தில் நிற்கும்  போதே ஏர்டேக் எச்சரிக்கை வருவது இயல்பே. அதனால் வாகன நெரிசலில் இருந்து விலகி சென்றுள்ளார் அப்பெண். ஆனால் கார் தனியாக சென்றுகொண்டிருக்கும் போதும் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. 


தன்னுடைய காரில் தான் மர்ம ஏர்டேக் இருப்பதை உணர்ந்த அப்பெண் கைப்பை, கார் என பல இடங்களிலும் தேடியுள்ளார். அப்போது மணி இரவு 2. தன்னுடைய லொகேஷனை யாரோ தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் என்பதால் அந்த நேரத்தில் வீட்டுக்கு செல்வதும், அல்லது ஒரே இடத்தில் இருப்பதும் ஆபத்து என்பதை உணர்ந்து விடிய விடிய காரில் சுற்றியுள்ளார். விடிந்ததும் நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளார் அப்பெண். காரை சல்லடைப் போட்டு தேடியதில் முன் சீட்டின் கீழ்ப்பகுதியில் அந்த மர்ம ஏர் டேக் கண்டுபிடிக்கப்பட்டது.




உடனடியாக ஏர்டேக்கை தூரமாக எடுத்து வீசியுள்ளார் அப்பெண்.அதனால் அதன் சீரியல் நம்பரை பெற முடியாமல் போனதாகவும், காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 
டிஜிட்டல் உலகத்தில் தொழில்நுட்பங்களை மிகவும் கவனமாகவும், விவேகமாகவும் கையாள வேண்டும் என்றும், சில நேரம் நமக்கே அது எதிராக சென்றுவிட வேண்டும் என்றும் போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர். மேலும் இது போன்ற நேரங்களில் உடனடியாக காவல்துறை உதவியை நாடலாம் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது