கணவர் மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் வெந்நீர் விழுந்ததால் தான் வெந்து போனதாகவும், மனைவி ஆசிட் வீசவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நபர் வழக்கில் புதிய திருப்பதை ஏற்படுத்தியுள்ளார். 


உத்தரப் பிரதேசம், கான்பூர், கூப்பர் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த டப்பு எனும் நபர் இரவு வீட்டுக்கு தாமதமாக திரும்பிய தன் மனைவி பூனத்திடம் “ஏன் தாமதமாக வீட்டுக்கு வந்தாய்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த பூனம் கோபத்தில் தன் கணவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர் டப்புவை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும்  இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தனது மனைவி பூனத்திடம் ஏன் வீட்டுக்கு தாமதமாக வந்தாய் என்று கேட்டபோது ​​​மனைவி கோபமடைந்து சண்டையிடத் தொடங்கியதாகவும், தொடர்ந்து ஆத்திரத்தில் கழிவறையிலிருந்து ஆசிட்டை எடுத்து டப்பு மீது அவர் வீசியதாகவும் பாதிக்கப்பட்ட கணவர் டப்பு காவல் துறையினரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விசாரணைக்கு பிறகு டப்புவின் மனைவி பூனத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


இந்நிலையில், தன் மீது ஆசிட் அடிக்கப்படவில்லை, பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த வெந்நீர்தான் கொட்டியதாக காவல்நிலையத்தில் தான் கொடுத்த புகாரை டப்பு திரும்ப பெற்றுள்ளார். 


அதில், தன் மீது வெந்நீர் விழுந்ததால் தான் வெந்து போனதாகவும், மனைவி என்மீது ஆசிட் எதுவும் வீசவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டப்புவின் மனைவியை சிறைக்கு அனுப்பிய ஸ்டேஷன் இன்சார்ஜ் ஆர்.ஜே.கௌதம் தெரிவிக்கையில், “ டப்புவின் முகத்தில் இரசாயன தீக்காயங்களால்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் சான்று அளித்துள்ளனர். திடீரென டப்பு வெந்நீர் கொட்டியததால்தான் இப்படி ஆனதாக தெரிவிக்கிறார்” என்றார்.


மற்றொரு சம்பவம்


இதே போல் முன்னதாக தெற்கு மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் மார்க் பகுதியில் அதிகாலையில் 62 வயதுடைய நபர் ஒருவர் மருத்துவமனையில் வேலை செய்து வந்த பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். 


இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியான 62 வயதுடைய நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.


முன்விரோதத்தால் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "தெற்கு மும்பையை சேர்ந்தவர் மகேஷ் பூஜாரி (65). இவரும் அதே பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணும் ஒரு வீட்டில் இரண்டு வருடங்களாக வசித்து வருகின்றனர். 50 வயதுடைய பெண்ணின் கணவர் 15 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் மகேஷ் பூஜாரி உடன் பழக்கம் ஏற்பட்டு ஒரே வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் வசித்து வந்தனர்.  அதே போன்று மகேஷ் பூஜாரிக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டது என தெரிகிறது.


அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அந்த பெண்ணானது மும்பையில் ஒரு மருத்துவமனையில் வேலை  செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டது தெரிகிறது. இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண்ணின் குழந்தைகள் மகேஷ் பூஜாரியை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியிருந்தனர். அந்த பெண்ணும் முதல் மனைவியுடன் இருக்குமாறு சொல்லியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதனால் கோபமடைந்த மகேஷ் பூஜாரி அந்த பெண் வேலை செய்யும் இடத்திற்கு சென்று ஆசிட் அடித்து விட்டு தப்பியோடியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான மகேஷ் பூஜாரி முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார்.