மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் காவல்துறையினரிடம் இரு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. தனது கணவருடன் உறவு கொண்டிருப்பதாக நினைத்த பெண் ஒருவர், ஜிம் ஒன்றில் புகுந்து அந்தப் பெண்ணைத் தாக்கியது இந்தப் புகார்களின் அடிப்படையாக இருக்கிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத் தலைநகரமான போபால் நகரின் கோஹி பிஸா பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் 15 அன்று நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலான பிறகு, கடந்த அக்டோபர் 17 அன்று புகார்கள் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கோஹி பிஸா பகுதியின் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் அனில் பாஜ்பாய் இந்த விவகாரம் குறித்து இன்று அளித்துள்ள பேட்டியில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது சகோதரியுடன் ஜிம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். அந்த ஜிம்மில் அவரது கணவர் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அங்கு அவருடன் இருந்த பெண் ஒருவரை, குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது கணவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்திருப்பதாகச் சந்தேகம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் 2 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், புர்கா அணிந்த பெண் ஒருவர் முதலில் தனது கணவரைத் தாக்குவதும், பிறகு ஜிம் உடையும், ஸ்போர்ட்ஸ் ஷூக்களும் அணிந்த பெண் ஒருவரைத் தாக்குவது போல பதிவாகியுள்ளது.
`ஜிம்மில் இருந்த பெண் தனது கணவருடன் உறவு கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண் சந்தேகம் கொண்டுள்ளார். அவர் ஜிம்மில் இருந்த பெண்ணை ஷூக்களால் தாக்கிய போது, அங்கிருந்த பலரும், அந்தப் பெண்ணின் கணவர் உள்பட அவரைத் தடுத்துள்ளனர். இந்த மொத்த மோதல் விவகாரமும் சுமார் 10 நிமிடங்கள் வரை சென்றுள்ளது. கடந்த அக்டோபர் 17 அன்று, தாக்கிய பெண்ணும் அவரது கணவரும் ஒருவர் மீது மற்றொருவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்’ என அனில் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
போபால் நகரத்தில் நூர்மகால் சாலை பகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட ஆண் தனது மனைவியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு, அவரது மனைவி தாக்கிய பெண் தனக்கு யாரென்றே தெரியாது என்று கூறி, அதிர்ச்சியளித்துள்ளார்.
தெரிந்தே பாதிப்பு உண்டாகும் வகையில் தாக்குவது, பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்வது, மிரட்டல் முதலான குற்றங்களின் கீழ் தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போபால் நகரத்தின் ஷாஜஹானாபாத் காவல் நிலையத்தில் இந்தப் பெண் தனது கணவர் மீது வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகப் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.