திருவாரூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.

Continues below advertisement

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே உள்ள அங்கன்வாடியில் உதவியாளராக பணியாற்றியவர் லலிதா. அவருக்கு வயது 39. இவர், 14 வயது சிறுவனை கடந்த 2021 ஆம் ஆண்டு ஊட்டி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுவன் காணாமல் போனதாக பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, சிறுவனை லலிதா என்பவர் அழைத்து சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, லலிதாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விரைவு மகிளா நீதிமன்றம் லலிதாவுக்கு 54 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அத்துடன், 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் வழங்க நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார்.

நாட்டில் பெண்கள், குழந்தைகள், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. இதற்காக பல சட்டங்கள், கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் இந்த சம்பவங்கள் குறைந்தபாடில்லை. ஒரு சில ஆண்களால் இந்த சம்பவங்கள் ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால், இப்போது, ஒரு சில பெண்களாலும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நடந்து வருகின்றன. ஆண் பிள்ளைகள்தானே என்று அவர்களை கண்டுகொள்ளாமல் பெற்றோர்கள் இருப்பதனால் ஏற்படும் விளைவுதான் இவை. சிறுவர்களிடமும் அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை, பாலியல் தொல்லைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அனைவருக்கும் இருக்க வேண்டும்.

Continues below advertisement

போக்சோ சட்டம்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.

இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.

கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம்

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு.