மத்தியப் பிரதேசத்தில் 23 வயது பெண்ணை மைனர் ஆண் உள்பர் ஆறு பேர் இணைந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம், திகாம்கர் பகுதியில் நேற்று (அக்.27) இரவு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டடம் ஒன்றில், மதுபோதையில் ஆறு பேரும் இந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அண்டை ஊரான சத்தர்பூர் மாவட்டத்தில் இருந்து கூலி வேலைக்காக பாதிக்கப்பட்ட பெண் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று காலை பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வெவ்வேறு இடங்களில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கட்டிடத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தக் குற்றத்தில் தொடர்புடைய ஐந்து ஆண்களையும் கைது செய்துள்ளதாகவும், 16 வயது சிறுவனை காவலில் வைத்துள்ளதாகவும் கோட்வாலி காவல் கண்காணிப்பாளர் ரகுராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்த சிறுமியை கடந்த முறை மிரட்டிய குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து, சிறுமியும் அவரது பெற்றோரும் கிஷன்கர் பாஸ் நகரில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். முதலில் அந்த நபர்கள் 50,000 ரூபாய் கேட்டு பிளாக்மெயில் செய்துள்ளனர். அவர்கள் மேலும் 2.5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாஹில், ஏற்கனவே சிறுமியின் சில ஆபாச படங்களை வைத்திருந்தார். அவற்றை பகிரங்கப்படுத்துவேன் என்று மிரட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கோத்ரா அருகே உள்ள ஒரு இடத்திற்கு அவர் தன்னை அழைத்ததாகவும், அங்கு 8 பேரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதுவரை, குற்றம் சாட்டப்பட்ட சாஹில், அர்பாஸ், ஜாவேத், தலீம், அக்ரம், சல்மான் மற்றும் முஸ்தகீம் ஆகியோர் கைது செய்யப்படவில்லை. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் காவல்துறை பொறுப்பாளர் அமித் சவுத்ரி, "பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, தனது மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். புகார் எடுக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
பாஜகவின் ஜெய்ப்பூர் எம்பி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், அசோக் கெலாட் தலைமையிலான மாநில காங்கிரஸ் அரசாங்கத்தின் மற்றொரு தோல்வி என்று இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு டெல்லியில் சராசரியாக தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 13,892 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். அந்த ஆண்டு, 9,782 வழக்குகள் பதிவாகியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 19 பெருநகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் 32.20 சதவீதம் ஆகும்.
டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.