இந்தியாவில் முதல் 5G தொழில்நுட்பத்தினை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜூன் 24 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது
இந்தியாவில் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சிப் பெற்றுவரும் நிலையில், 5G தொழில்நுட்ப வசதிகள் மிக விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றது. குறிப்பாக 5G தொடர்பான சேவைகளை நடைமுறைப்படுவதற்கான சோதனைகளை ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன், ஐடியா போன்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் அனைவரும் தங்களது பணிகளை தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.
ஆனால் தங்களது சோதனைகளையெல்லாம் முடித்து விட்ட நிலையில், ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் 5G சேவையினை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக பல்வேறு தகவல்களின் படி, வருகின்ற ஜூன் 24-ஆம் தேதி ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ் நிறுவனத்தின் பொதுக்கூட்டத்தில் 5 ஜி சேவை அறிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக 5 ஜி சேவை என்றால் என்ன? ஒரு வேளை இந்தியாவில் அதன் சேவையினை தொடங்கும் நிலையில் என்ன மாதிரியான அம்சங்களை ரிலையன்ஸ் கொண்டிருக்கும் என தெரிந்து கொள்வோம்.
ரிலையன்ஸ் 5G-இன் அம்சங்கள்:
பொதுவாக அனைத்து தரப்பட்ட மக்களையும் கவரும் வகையில் தான் ஜியோ நிறுவனம் ஒவ்வொரு முறையும் தனது சேவையினை மக்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக மாதத்திற்கு 1 ஜிபி டேட்டா சேவையினை பிற நெட்வொர்க்குகள் வழங்கி வந்த நிலையில் தான் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டாவினை ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளது. தற்போது மக்கள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு 4 ஜி நெட்வொர்க் சேவையினை அறிமுகப்படுத்தியதோடு, மலிவு விலையிலும் அதனை மக்களுக்கு வழங்கியது.
இந்நிலையில், 5 ஜி சேவையினை இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்யும் போதும் மலிவு விலையில் வழங்கலாம் என தெரிகிறது. ஆனால் 4 ஜி யினை விட 5 ஜி யில் நெட்வொர் அதிக வேகமாக இருக்கும் என்பதால் அதற்கான செலவுகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறலாம் என கூறப்படுகிறது. இருந்த போதும் மக்களிடம் இப்பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 5 ஜி சேவையினை மலிவு விலையில் வழங்கலாம் என்று எதிர்ப்பார்க்கலாம்.
குறிப்பாக இந்தியாவில் 700MHz, 3.5GHz மற்றும் 26GHz ஸ்பெக்ட்ரம்களைப் பயன்படுத்தி 5 ஜி சோதனைகளை மேற்கொள்ளவதற்கு கடந்த மாதம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தான் ஜியோ தனது சோதனையை மும்பையில் நடத்தி முடித்துள்ளது. இதுக்குறித்து Qualcomm வெளியிட்ட அறிக்கையின் படி, உள்நாட்டு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி சோதனைகளை மேற்கொண்டதில் ஜியோ 5 ஜி 1Gbps வேகத்தினை கொண்டுள்ளதாக இருந்தது என கூறப்படுகிறது. மேலும் ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் ஐ.ஐடி ஹைதராபாத் ஆகியவற்றிலும் இந்தியாவில் வரவுள்ள ஜியோ 5 G சோதனையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே தற்போது பல கட்ட சோதனைகள் நிறைவுற்ற நிலையில் விரைவில் 5 G தொழில்நுட்பத்தினை ரிலையன்ஸ் ஜியோ தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் ரிலையன்ஸ் மற்றும் கூகுள் இணைந்து மலிவு விலையில் 5 ஜி ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது. இதன் விலை ரூ .2,500 முதல் ரூ .5,000 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 5 ஜி சேவை மற்றும் மலிவு விலை 5 ஜி ஸ்மார்ட் போன் ஆகிய இரண்டும் ஜியோ பயனர்களை அதிகமாக ஈர்க்கும் என்பதில் மாற்றம் இல்லை. மேலும் அதிக அளவிலான வாடிக்கையாளர்களையும் ஜியோ நிறுவனம் தன் வசம் வைத்துக்கொள்ளும்.