தனியார் நிதி நிறுவன ஊழியர் தவணையை திருப்பி செலுத்தக் கோரி தகாத வார்த்தைகளால் பேசியதாக பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த அணுகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரின் மனைவி ஜெயந்தி. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று கடந்த இரண்டரை ஆண்டுகளாக தவணை தவறாமல் செலுத்தி வந்துள்ளார்.

 

இந்த நிலையில், இந்த மாதத்திற்கான கடன் தவணை செலுத்த பத்து நாட்கள் தாமதம் ஆகியதால் தனியார் நிதி நிறுவன கடன் வசூலிப்பவர்கள் வீட்டிற்கு வந்து தினமும் தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து நேற்றைய தினம் வீட்டிலிருந்த ஜெயந்தியின் இளைய மகளிடம் தனியார் நிதி நிறுவன ஊழியர் தவனையை திருப்பி செலுத்தக் கோரி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து மனம் உடைந்த சிறுமி, தாயார் ஜெயந்தியிடம் சென்று அழுதுள்ளார். பின்னர் சிறுமியை கோவிலுக்கு அனுப்பி விட்டு வீட்டிலிருந்த ஜெயந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 இதே நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிய ஒரு நபரை கடந்த வாரம் வங்கி மேலாளர் தரகுறைவாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மஞ்ச குப்பத்தை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரை போனில் தொடர்பு கொண்டு, ஏன் கட்டவில்லை என்று கேட்டதற்கு, அவர் உடல்நிலை சரியில்லை என தெரிவித்தார். உடல்நிலை சரியில்லை என்றால் ’என்ன இதயத்தில் உனக்கு பெரிய ஓட்டையா பிச்சை எடுத்தாவது பணத்தைக் கட்டு’ என்று அவர் பேசியிருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கருணாமூர்த்தி கடலூர் காவல் கண்காணிப்பாளர்களும் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இதற்கான விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அதே வங்கி ஊழியர்கள் பெண்ணை அவமானப்படுத்தியதால் அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)