உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோ நகரில் அமைந்துள்ளது சார்பாக் ரயில்நிலையம். இந்த ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பணியில் உள்ள காவலரை செருப்பால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை சார்பார்க் ரயில் நிலையத்தில் பயணிகள் சிலர் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களில் பெண் பயணிகள் சிலரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கே மதுபோதையில் காவலர் ஒருவர் வந்துள்ளார். அவர் தூங்கிக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவரிடம் தவறுதலாக நடந்து கொள்ள முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் அந்த காவலரை திட்டியதுடன் தனது செருப்பால் அடித்தார்.
மேலும், அங்கிருந்த ஆண் பயணி ஒருவரும் அந்த காவலரிடம் இதுதொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை மதுபோதையில் இருந்த அந்த காவலர் தாக்க முற்பட்டுள்ளார். அப்போது, அந்த பெண் பயணி மீண்டும் அந்த காவலரை தனது செருப்பால் தாக்குகிறார். இதனால், ஆத்திரமடைந்த அந்த காவலர் அந்த பெண் பயணியை அறைந்து கீழே தள்ளுகிறார்.
அப்போது, இந்த விவகாரத்தை தட்டிக்கேட்ட மற்றொரு பெண் காவலரையும் அந்த காவலர் தள்ளிவிட முயற்சித்தார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த பயணிகள் சிலர் தங்கள் செல்போன்களில் படம்பிடித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக, விளக்கமளித்துள்ள லக்னோ காவல் ஆணையர் அந்த காவலர் ஆண் பயணியிடம் அவரது உடைமைகளை எடுத்துக்கொண்டு செல்லுமாறு கூறியதாகவும், அதன் காரணமாகவே அவருக்கும், அந்த காவலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சண்டையில் முடிந்ததாக கூறியுள்ளனர். ஆனால், சமூக வலைதளங்களில் உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தேசிய குற்றங்களின் ஆவண புள்ளிவிவரப்படி 2020ம் ஆண்டு மட்டும் உத்தரபிரதேசத்தில் 9 ஆயிரத்து 864 குற்றங்கள் பெண்களுக்கு எதிரான தாக்குதல் குற்றச்சாட்டாக பதிவாகியுள்ளது. அவற்றில் 3 ஆயிரத்து 935 பாலியல் குற்றங்களாகும். 1728 வழக்குகள் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக மற்றும் 326 வழக்குகள் பெண்களை அநாகரீகமாக பின்தொடர்ந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்