நெல்லை மாவட்டம், வீரவநல்லூர், கிளாக்குளம் பகுதியைச் சேர்ந்த பேச்சியப்பன் (57). இவர் வீரவநல்லூர் அருகே உள்ள ஆர்.சி நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பேச்சியப்பன் என்பவருடன் காலங்கரையை சேர்ந்த லீனா என்பவரும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரி சலோமி (60) என்பவர் பாளையங்கோட்டை, வி எம் சத்திரத்தில் வசித்து வருகிறார். ஆசிரியர்களுக்கென கடன் வழங்குவதற்கென ஆசிரியர் சிக்கன நாணய கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சூழலில் ஆசிரியை லீனா மற்றும் அவரது சகோதரி சலோமி ஆகிய இருவரும் சேர்ந்து கூட்டுறவு சங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று உள்ளனர்,
குறிப்பாக TNEMIS என்ற App மூலமாக ஆசிரியை லீனா தன்னுடன் பணி புரியும் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளின் தகவல்களை பெற்று உள்ளார். பின்னர் சேரன்மகாதேவியில் உள்ள ஆசிரியர்களுக்கான கூட்டுறவு சங்கத்தில் தன்னுடன் பணிபுரியும் ஆசிரியர்களின் முகவரியில் அவர்களுடைய புகைப்படத்தை மாற்றி, ஆசிரியர்களுடைய கையொப்பம் போலவே போலியாக கையொப்பத்தை போட்டு ரூ. 54 லட்சம் வரை கடனாக விண்ணப்பித்துள்ளார். அப்போது ஆசிரியர் பேச்சியப்பன் செல்போன் எண்ணுக்கு கடன் பெற்றதாக மெசேஜ் சென்றுள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பேச்சியப்பன் தான் எந்த ஒரு கடனும் வாங்காத நிலையில் தனக்கு வந்த மெசேஜ் அடிப்படையில் விசாரித்ததில் அவரது பெயரில் கடன் வாங்கியதாக தெரிய வந்துள்ளது. உடனடியாக ஆசிரியர் பேச்சியப்பன் பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் புகார் அளித்து உள்ளார்,
அப்புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்து தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ஆசிரியை லீனா பாளையங்கோட்டை வி எம் சத்திரத்தில் வசிக்கும் தனது சகோதரி சலோமியுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. குறிப்பாக போலி ஆவணங்கள் தயார் செய்து 4 காசோலைகள் மூலம் ரூபாய் 54 லட்சம் மோசடி செய்ய திட்டமிட்டு இருப்பதும் அதில் முதற்கட்டமாக ஒரு காசோலை மூலம் ரூபாய் 13 லட்சம் மட்டுமே மோசடி செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 41 லட்சத்தை காசோலை மூலம் பெற முயல்வதற்கு முன்பே காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு பணம் வங்கியிலேயே தடுக்கப்பட்டது. தொடர்ந்து இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியை லீனா மற்றும் அவரது சகோதரி சலோமி மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் ஆசிரியர் ஒருவரே இது போன்ற மோசடியில் ஈடுபட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்