கர்நாடக தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது ஞானபாரதி பகுதி. இந்த பகுதியில் உள்ள மாருதி லே அவுட் பகுதி. அந்த பகுதியில் வசித்து வருபவர் ஜெயம்மா. அவருக்கு வயது 70. அவரது பேத்தி மமதா. அவருக்கு வயது 25. மமதாவிற்கு திருமணமாகிவிட்டது. அவரது கணவர் அருகில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். பி.காம். பட்டதாரியான மமதாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆன நிலையில், பரிதாபமாக உயிரிழந்தது. இதனால், மமதா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.
கடுமையான மன உளைச்சலில் இருந்த மமதாவிற்கும், அவரது பாட்டி ஜெயம்மாவிற்கும் இடையே நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த மமதா தனது பாட்டியை தள்ளிவிட்டுள்ளார். இதில், வீட்டின் அருகில் இருந்த சுவரில் மோதி ஜெயம்மா கீழே விழுந்துள்ளார். தலையில் பலமாக அடிபட்ட ஜெயம்மா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட மமதா அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால், என்ன செய்வதென்று தெரியாத மமதா வீட்டில் தனது படுக்கை அறைக்கு உள்ளே சென்றுள்ளார். அங்கே கதவை உள்பக்கம் தாழிட்ட மமதா, பாட்டியை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மமதாவின் சகோதரர் சேத்தன் தாய் மஞ்சுளாவுடன் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்தார். நீண்ட நேரம் போன் செய்தும் மமதாவும், ஜெயம்மாவும் போனை எடுக்காததால் இருவரும் பதற்றமடைந்துள்ளனர். உடனே, மமதாவின் கணவர் மஞ்சுநாத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அக்கம்பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்துள்ளது. மஞ்சுநாத்தும், அக்கம்பக்கத்தினரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மமதாவை தேடியபோது அவர் படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். ஜெயம்மா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து, உடனே ஞானபாரதி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்