தன் கணவனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தால், அந்த பெண்ணை கூலிப்படை ஏவி மனைவியே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த வர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி காயத்ரி. இருவரும் கொண்டாப்பூர் ஸ்ரீராம் நகர் காலனியில் வீடு எடுத்து வசித்துவந்தனர். இந்த நிலையில், காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவருடன் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் படித்த ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த பெண்ணை காயத்ரியுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளவே அந்த பெண்ணும் காயத்ரியுடன் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை தங்கியுள்ளார். இந்த நிலையில், ஸ்ரீகாந்திற்கும் அந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக காயத்ரிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் சண்டை முற்றவே அந்த பெண் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டார். ஆனாலும், காயத்ரிக்கு சந்தேகம் முற்றவே அந்த பெண்ணை பழிவாங்க விபரீத யோசனை உதிக்கவே அதை செயல்படுத்தத் திட்டம் தீட்டியிருக்கிறார் காயத்ரி.


அந்தப் பெண்ணை கூலிப்படை வைத்து பாலியல் வன்கொடுமை செய்யவைத்து மிரட்டினால் தனது காதலரிடமிருந்து விலகிவிடுவார் என்று எண்ணிய காயத்ரி, அதற்காக 5 பேருக்கு பணம் கொடுத்து கொண்டாப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வரவைத்திருக்கிறார்.


அதே நேரத்தில் அந்த பெண்ணுடன் பேசிய காயத்ரி கடந்த மே 26-ஆம் தேதி அவரை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். காயத்ரி வீட்டிற்கு தன் பெற்றோருடன் அந்த பெண் வரவே, அவருடன் தனியாக பேசவேண்டும் என்று கூறி பெற்றோரை வெளியே இருக்க வைத்துள்ளார். இளம்பெண் தனியறைக்குள் சென்றபோது ஏற்கனவே அங்கு காத்திருந்த கூலிப்படையினர் 5 பேரும் அந்த பெண்ணின் வாயில் துணியை திணித்து சத்தம்போட முடியாதபடி செய்துள்ளனர்.


பின்னர் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை  தாக்கியுள்ளனர். 4 பேர் அந்த பெண்ணை பிடித்துக்கொள்ள ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்த காயத்ரி, இனி ஸ்ரீகாந்துடன் பழகக்கூடாது என்றும், நடந்த விஷயத்தை வெளியே கூறக்கூடாது, காவல்துறையிடம் செல்லக்கூடாது அப்படி செய்தால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.


எனினும், சுதாரித்துக்கொண்ட அந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அப்பெண்ணின் பெற்றோர் விரைந்து சென்றுள்ளனர். இவர்கள் உள்ளேச் சென்றதும் கூலிப்படையினர் வெளியே ஓடியுள்ளனர்.


இந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். உடல்நிலை மோசமாகவே சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்த காச்சிபவுலி காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு காயத்ரி மற்றும் அவர் நியமித்த கூலிப்படையினரான 22 வயதான உல்சாலா மனோஜ்குமார், 25 வயதான சையது மஸ்தான், 25 வயதான ஷேக் முஜாஹித், 32 வயதான ஷேக் மவுலா அலி, 22 வயதான ப்ரித்வி விஷ்ணு வர்தன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்டப் பெண்ணின் பெற்றோர், காயத்ரிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆனால், ஸ்ரீகாந்திற்காக அவரது கணவனை விட்டுவிட்டு வந்துவிட்டார். காயத்ரிக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பது தன் பெண்ணிற்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.