சமூக வலைத்தளத்தில் குமுறல்

 

சமூகவலைதளம் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து, சமூக வலைதளத்தின் மூலம் கோரிக்கைகளையோ, குறைகளையோ சம்மந்தப்பட்ட அதிகார மையத்திற்கு கொண்டு செல்வது எளிதாகியுள்ளது. அந்த வகையில், கோவிலில் தங்களுக்கு உணவு சாப்பிட அனுமதி மறுக்கிறார்கள் என்ற கோரிக்கையை, முன்வைத்த பழங்குடியின பெண் அஸ்வினி என்பவர் அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம், மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் கோவிலில்,  இந்த பிரச்சனை இருப்பதாக அஸ்வினி தெரிவித்திருந்தார். இதனை அடுத்து, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் நேரடியாக கோவிலுக்கு, சென்று அஸ்வினியுடன் அமர்ந்து அதே கோவிலில் உணவருந்தினார்.



 

நேரடியாக வந்த முதலமைச்சர்

 

அப்பொழுது அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை பழங்குடியின பெண் அஸ்வினி முன்வைத்தார். 2021 ஆம் ஆண்டு, தீபாவளி தினத்தன்று நேரடியாக பழங்குடியின பெண் அஸ்வினி வசிக்கும் பூஞ்சேரி பகுதிக்கு சென்று,  நல திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். அஸ்வினியின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார். பழங்குடியின பெண் அஸ்வினி மற்றும் அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்திருந்தார். முதலமைச்சரின் இந்த செயல் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளை பெற்றது.

 



 

அடுக்கடுக்கான புகார்கள்

 

இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக  அஸ்வினி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனக்கு வங்கி கடன் வழங்கவில்லை, மகாபலிபுரம் பகுதியில் கடை ஒதுக்கி தரவில்லை, உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மீண்டும் சமூக வலைதளம் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் அஸ்வினி பேட்டியை அளித்திருந்தார். அந்த வீடியோவும் மீண்டும் வைரலாகவே, சில மணி நேரங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.



 

இந்தநிலையில், மாமல்லபுரம் பகுதியில் பிற வியாபாரிகளை மிரட்டுவதாக மாமல்லபுரம் வியாபாரிகள் குற்றச்சாட்டுகள் முன் வைத்தனர். இது குறித்து மாமல்லபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர். அஸ்வினியும் தன்னை மிரட்டுவதாக கூறி புகார் ஒன்றை அளித்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு , அஸ்வினியை மாமல்லபுரம் காவல் நிலையத்தில் அனைத்து விசாரணையும் மேற்கொண்டு இருந்தனர். 

 

தொடர்ந்து மிரட்டல் ?

 

இந்தநிலையில், மீண்டும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மாமல்லபுரம் வியாபாரிகளை மிரட்டியதாக கூறி, வியாபாரி சங்கத்தினர் மற்றும் மாமல்லபுரம் வியாபாரிகள் மாமல்லபுரம் காவல் நிலையத்தையே முற்றுகையிட்டு, அஸ்வினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். அப்பொழுது மீண்டும் வைரலான அஸ்வினி, தான் அவ்வாறு செய்யவில்லை என்று விளக்கம் அளித்து இருந்தார். அதேபோல், வியாபாரிகளும் தங்கள் தரப்பு புகார்களை ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்திருந்தனர். 

 


வியாபாரி சங்கத்தினர்


 

கடை வைப்பதில் தகராறு

 

இந்தநிலையில், மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த விஜி என்பவரது மனைவி நதியா கடை அமைத்துள்ளார். இந்நிலையில் கடை அமைப்பதில், அஸ்வினிக்கும் , நதியாவிற்கும்  இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது .இதில் அஸ்வினி தனது கையில் இருந்த கத்தியை எடுத்து நதியாவை வலது தோள்பட்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நதியாவை அருகில் இருந்த மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.



 

கொலை முயற்சி சம்பவம்

 

அங்கு நதியாவிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் 10 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ருத்மங்கதன் தலைமையிலான போலீசார் பூஞ்சேரி பகுதியில் இருந்த அஸ்வினியை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர் . தொடர்ந்து போலீசார் அஸ்வினியை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். திருக்கழுக்குன்றம் மேஜிஸ்ட்ரேட் கதிரவன் கொலை முயற்சி  வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வினியை ஆகஸ்ட்  மாதம் 30 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து போலீசார் அஸ்வினியை புழல் அடைத்தனர்.



 

அப்பொழுது வீடியோ எடுக்க செய்தியாளர்களை பார்த்து அஸ்வினி, " நான் என்ன தவறு செய்தேன்? எல்லோரும் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள், எனக்கு குழந்தை உள்ளது” என தெரிவித்தார்.  முதலமைச்சரே வீட்டிற்கு சென்று பார்த்த, பெண் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.