மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் இரட்டை கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பணியில் மெத்தனமாக இருந்ததாக பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் உளவுப்பிரிவு காவல் ஒருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கொலை செய்ய சாராய வியாபாரிகள் 


மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 14 -ஆம் தேதி 25 வயதான ஹரிஷ், பொறியியல் கல்லூரி மாணவர் 20 வயதான ஹரிசக்தி ஆகிய இரண்டு இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தட்டிக் கேட்டதாகவும் அதன் சாராய விளக்குகள் வியாபாரிகள் இவர்கள் இருவரையும் படுகொலை செய்தனர் என பொதுமக்கள் தெரிவித்தனர்.



“சாராய வியாபாரிகளால் நடந்த 2 கொலைகள்” மயிலாடுதுறையில் அடுத்தடுத்து அதிரடிகள்..!


பொதுமக்கள் போராட்டம் 


இந்த இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்களும், இறந்த இளைஞர்களின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெரம்பூர் காவல் நிலையத்தை சேர்ந்தோர் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்றும் பொதுமக்கள் அழுத்தமாக குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.  


ஆறு பேர் கைது


அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். இதனை அடுத்து பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை மூன்று தனிப்படை அமைத்து தேடி வந்தனர். கொலை தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரிகள் ஐவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளை தப்பிக்க வைக்க உதவியதாக முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த கலையரசன் என்பவரது மகன் சஞ்சய் என்ற இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் 


இந்நிலையில் பெரம்பூர் காவல் ஆய்வாளராக உள்ள நாகவள்ளி பணியில் மெத்தனமாக இருந்தாக கூறி காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தஞ்சை மாவட்டம் சுவாமிமலை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த மலைச்சாமியை பெரம்பூர் காவல் ஆய்வாளராக நியமித்து தஞ்சை சரக டிஐஜி ஹியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.




உளவுப்பிரிவு காவலர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்


இதனியையே பெரம்பூர் காவல்நிலையத்தில் உளவுப்பிரிவு காவலராக பணியில் இருந்த காவலர் பிரபாகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக மாவட்ட அட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரம்பூர் காவல் நிலையத்தில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்ற உளவுப்பிரிவு காவலர் பிரபாகரன் இடமாற்றம் செய்ய வேண்டும். இவரது தொலைபேசியை எண்களை ஒரு மூன்று ஆண்டு காலத்திற்கு ஆய்வு செய்தாலே சாராயத் தொழில் அதிபர்களின் பரிமாற்ற தொடர்புகள் தெரியவரும். மேலும் இவர் மூலமாக மாமூல் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்ற எஸ்பி காவல் ஆய்வாளர் மற்றும் சில அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி வந்த நிலையில் தற்போது இவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.