மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அருகே உள்ள அந்தேரி எனும் இடத்தில் செயல்பட்டு வந்த நடன பாரில் இருந்து 17 இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


தீபா பார் (Deepa Bar) என்ற நடன அரங்கில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டு தொடர்பாக விடுதியின் மேலாளர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த ரெய்டு குறித்து எஸ்.எஸ்.பிராஞ்ச் போலீஸார் கூறியதாவது: மும்பை அந்தேரி தீபா பாரில் சில சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில், நாங்கள் அங்கு ச்ன்றோம். ஆனால், நாங்கள் அங்கு சோதனையைத் தொடங்கிவதற்கு முன்னரே அங்கிருந்து நிறைய பெண்கள் வெளியேறினர். வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரகசிய எலக்ட்ரானிக் அலெர்ட் சிஸ்டம் மூலம் தகவல் கிடைத்து பெண்கள் பலரும் அங்கிருந்து தப்பித்திருந்தனர்.
அங்கு எஞ்சியிருந்த பெண்களோ, பார் மேலாளரோ அல்லது காசாளரோ கூட அங்கு நடன மங்கைகளை வைத்து நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறதா என்பதைக் கூற மறுத்தனர்.






உடனே போலீஸார் மேக்கப் அறைக்குள் நுழைந்தனர். அங்கே போலீஸாருக்கு ஷாக் காத்திருந்தது. அதாவது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய கண்ணாடி சந்தேகத்தை எழுப்புவதாக இருந்தது. அந்த கண்ணாடியின் பின் சிறு சிறு அறைகள் இருக்கலாம் என போலீஸார் சந்தேகத்தினர்.


அவர்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போலவே அங்கு அறைகள் இருந்தன. ஒவ்வொரு அறையும் ஏசி வசதியும் படுக்கை வசதியும் கொண்டிருந்தன. இதன் மூலம் அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் உறுதியானது.


இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் போலீஸார் அந்தக் கண்ணாடியை உடைத்தனர். அதன் பின்னால் இருந்த அறையையும் உடைத்து அங்கிருந்த பெண்களை மீட்டனர். 






குறுகிய பாதை வழியாக பெண்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.