ஈவு இரக்கமின்றி தாக்கிய கொடூர கும்பல்
தென்கிழக்கு டெல்லி சண்லைட் காலணியில் மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் சென்றுக் கொண்டிருந்தனர். ஒரு ஆண், அவரது மனைவி, அவரது சகோதரி மற்றும் அவரது உறவினர் ஆகியோர் சென்றுக் கொண்டிருந்தனர். நண்பரின் வீட்டில் இரவு உணவு முடித்து விட்டு நேற்றிரவு 11.30 மணிக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்களை வழிமறித்து ஒரு பெண் உட்பட சிலர் உதவி கேட்டனர்.
அதாவது, எங்களின் மொபைலில் சார்ஜ் இல்லை என்றும் உபேர் கார் புக் செய்து தருமாறு கேட்டனர். இதனால், மணிப்பூரைச் சேர்ந்தவர் அவரது மொபைலில் கார் முன்பதிவு செய்தார். முன்பதிவு செய்த காரும் வந்த நிலையில், அந்த கும்பலில் ஒருவர் தகாத வார்த்தைகளால் மணிப்பூரைச் சேர்ந்த 2 பெண்களை பேசினார். மேலும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால், அங்கிருந்த மணிப்பூரைச் சேர்ந்த ஆண்கள் இரண்டு பேர் இதை எதிர்த்தனர். இதனால், அந்த கொடூர கும்பல் அவர்களது நண்பர் ஒன்பது பேரை அழைத்து சரமாரியாக தாக்கியது. அந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல், மணிப்பூரைச் சேர்ந்த நான்கு பேரை சரமாரியாக தாக்கினர். மேலும், அங்கிருந்த பெண்களின் தலைமுடியை பிடித்து, தரதரவென இழுத்து சென்று பயங்கரமாக அடித்துள்ளனர். இதனை அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தப்படி நின்றுக் கொண்டிருந்தனர். இது சம்பந்தமான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பகீர் வீடியோ:
அந்த வீடியோவில், 9 பேர் கொண்ட கும்பல், மணிப்பூரைச் சேர்ந்த நான்கு பேரை சரமாரியாக அடித்துள்ளனர். காலால் எட்டி உதைத்தும், முகத்தில் தாக்கியும் உள்ளனர். மேலும், அங்கிருந்த மணிப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் தலைமுடியை பிடித்து, தரதரவென இழுத்து சென்று அடித்துள்ளது போன்று காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில், நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்நிலையத்தில் இவர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். "நாங்கள் சாகப் போகிறோம் என்று நினைத்தேன். எங்களை அடிப்பதை அங்கிருந்த யாரும் தடுத்து நிறுத்தவில்லை. இதனால், நாங்கள் இறந்துவிடுவோம் என்று நினைத்தோம். அந்த கும்பல் எங்களை தாக்கியதில் எங்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது" என்று புகாரில் தெரிவித்தனர்.