விழுப்புரம்: திண்டிவனம் பகுதியில் மூக்கு முட்ட சாராயம் குடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் கலாநிதி (36). இவர் ஆட்டோ ஓட்டுவது மற்றும் கூலி வேலைக்கு செல்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதிக குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தனது தாய் கஸ்தூரி என்பவரிடம் 500 ரூபாய் வாங்கிக் கொண்டு புதுச்சேரி சேதுராப்பட்டு சென்று சாராயம் அருந்தியதாக கூறப்படுகிறது.
மேலும் காலையில் உணவு சாப்பிடாததால் வெறும் வயிற்றில் அதிக அளவு சாராயம் உட்கொண்டு உள்ளார். அங்கிருந்து 150 எம்.எல் பாட்டிலில்களில் சாராயத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த கலாநிதி சாராயத்தை குடித்துவிட்டு சாப்பிடாமல் உறங்கியுள்ளார். அப்பொழுது வெகு நேரம் ஆகியும் கலாநிதி எந்தவித அசைவும் இன்றி படுத்திருந்ததால் குடும்பத்தினர் அவரை எழுப்பியுள்ளனர். அவர் மயக்க நிலையில் இருந்ததால் அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரோசனை போலீசார் கலாநிதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைத்து வழக்கு பதிவு செய்து கலாநிதி சாராயம் அருந்தியதால்தான் இறந்தாரா அல்லது வேறெனும் பிரச்சனையா என விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் பகுதியில் மூக்கு முட்ட சாராயம் குடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாராயம் (Arrack)
சாராயம் (Arrack) தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் கரும்புச்சாறு, தென்னை ஊறல் அல்லது பழச்சாறுகளைப் புளிக்க வைத்து வடிதிறுக்கப்படும் ஓர் மது பானமாகும். சாராயம் பொதுவாக பொன்மஞ்சள் நிறத்தில் இருக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் "அரக்" என்று வழங்கப்படும் நிறமற்ற பானத்திலிருந்து இது வேறானது.தென்னையிலிருந்துப் பெறப்படும் சாராயம் தானியத்திலிருந்தோ பழத்திலிருந்தோ வடிக்கப்படாமையால் இசுலாமியர்களின் மதுவிலக்கு விதிக்கு இது "விலக்காகக்" கருதப்படுகிறது. இந்தியாவில் கரும்பாலைகளில் சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் மொலாசஸ் எனும் வெல்லப்பாகுவிலிருந்து எரிசாராயம் எடுத்து, பின் அதில் தேவையான நீரைக் கலந்து சாராயம் தயாரிக்கப்படுகிறது.