சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 5 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சந்திரக்குமார் மகன் வசந்தகுமார் வயது 20 . இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது. இரு வீட்டார் சம்மதத்துடன்  திருமணம் சமீபத்தில்  நடந்து முடிந்துள்ளது. இதுபற்றி தகவலறிந்த மரக்காணம் தாசில்தார் உஷா, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சிறுமியை திருமணம் செய்த வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் வசந்தகுமார்  பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் என மொத்தம் 5 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




அகதிகள் முகாமில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் தற்போது இந்த கைது சம்பவம் அதை உறுதிபடுத்தியுள்ளது. ஏழ்மை காரணமாகவும், உறவு முறையை பலப்படுத்தவும் இது போன்ற குழந்தை திருமணங்களை சில பெற்றோர் முன்நின்று நடத்துகின்றனர். ஆனால் அதனால் சம்மந்தப்ப பெண் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றனர். இது தொடர்பாக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டும், இன்னும் அந்நிலை தொடர்வது வருந்ததக்கதே.