விழுப்புரம் சாலாமேடு சிங்கப்பூர் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இந்த தம்பதிக்கு சூர்யகுமார் (வயது 19) என்ற மகன் உள்ளார். இவர், ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பு படித்து வருகிறார். கிருஷ்ணவேணி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். சூர்யகுமாரும், திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த ஏழுமலை மகன் நந்தகுமார்(21), சூர்யா, மாரி, பெரியபாலா, முரளி ஆகியோரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் சூர்யகுமாரின் வீட்டிற்கு நேற்று இரவு அவரது நண்பர்கள் வந்தனர். அவர்கள், டீ குடிப்பதற்காக சூர்யகுமாரை வெளியே அழைத்துச்சென்றனர். ஜானகிபுரத்தில் தயார் நிலையில் இருந்த காரில் சூர்யகுமாரை ஏற்றி, கரடிப்பாக்கத்திற்கு கடத்தி சென்றனர். பின்னர் சூர்யகுமாரிடம் 5 பேரும், உன் அம்மாவிடம் அதிக பணம் இருக்கிறது. எனவே ரூ.10 லட்சம் வாங்கித்தருமாறு கேட்டு மிரட்டினர். இதை சற்றும் எதிர்பாராத சூர்யகுமார், பணம் வாங்கித்தர முடியாது என்று கூறினார்.



ரூ.10 லட்சம் கேட்டு தாக்குதல் :


இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் தாக்கினர். வலிதாங்க முடியாமல் தவித்த சூர்யகுமார், தனது தாய் கிருஷ்ணவேணியை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சத்தை உடனடியாக எடுத்து வருமாறு கதறியபடி கூறினார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் கிருஷ்ணவேணி திகைத்தார். இது பற்றி அவர், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சூர்யகுமாரை மீட்கவும், அவரை கடத்திய 5 பேரை கைது செய்யவும் போலீசார் திட்டம் வகுத்தனர்.




நள்ளிரவில் தனியாக வரவைத்து கடத்தல் :


இதனிடையே கிருஷ்ணவேணியை செல்போனில் தொடர்பு கொண்ட சூர்யகுமாரின் நண்பர்கள், விழுப்புரம் புறவழிச்சாலையில் எல்லீஸ்சத்திரத்துக்கு நள்ளிரவில் பணத்துடன் தனியாக வரவேண்டும் என்றும், போலீசுக்கு தெரிவிக்க கூடாது என்றும் கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து போலீசாரின் ஆலோசனைபடி கிருஷ்ணவேணி, பணப்பையுடன் எல்லீஸ்சத்திரத்திற்கு சென்றார். அப்போது காரில் வந்த சூர்யகுமாரின் நண்பர்கள், பணத்தை கேட்டனர். அந்த சமயத்தில் அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், தங்களது ஜீப்பில் விரைந்தனர்.


போலீசாரின் ஜீப்பை கண்டதும் அவர்கள், சூர்யகுமாரை கீழே தள்ளிவிட்டு காரில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். உடனே போலீசார், அவர்களை துரத்திச்சென்றும் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து சூர்யகுமாரை மீட்ட போலீசார், அவரை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, சூர்யகுமார் கொடுத்த புகாரின் பேரில் நந்தகுமார், சூர்யா, மாரி, பெரியபாலா, முரளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் நந்தகுமார் கைது செய்யப்பட்டார். மற்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண