விழுப்புரம் : காதலை கைவிட மறுத்த அரசு கல்லூரி மாணவரை அடித்துக்கொலை செய்த இரண்டு இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 


அரசு கல்லூரி மாணவரை அடித்துக்கொலை


விழுப்புரம் அருகே உள்ள கப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியன் மகன் ராஜன் என்கிற ராமன் (வயது 22). இவர் கடந்த 2023-ல் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார். இவர், ஒருகோடி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துள்ளார்.


இதையறிந்த அப்பெண்ணின் உறவினரான விழுப்புரம் கே.கே.சாலை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் சரவணன் என்கிற லாலி கார்த்திக், ராஜன் கல்லூரிக்கு செல்லும் போது அவரை வழிமறித்து சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். பின்னர் 19.2.2023 அன்று சரவணனின் உறவினர்களான ஒருகோடி கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகன் சத்தியராஜ் (28), ரவீந்திரன் (40) ஆகியோர் சேர்ந்து ராஜனை தாக்கினர். இதுபற்றி ராஜன், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய முடிவு செய்திருந்த நிலையில் அவரை அவரது தந்தை முனியன் சமாதானப்படுத்தினார்.


இந்த சூழலில் அன்ற மாலை சரவணன் என்கிற லாலிகார்த்திக், ராஜனை செல்போனில் தொடர்புகொண்டு மதியம் நடந்த பிரச்சினைக்கு சமாதானம் பேச ஒருகோடி கிராம சிவன் கோவில் அருகே வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில் அங்கு சென்ற ராஜனுக்கு லாலிகார்த்திக், சத்தியராஜ் ஆகிய இருவரும் மது வாங்கி கொடுத்தனர். பின்னர் போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த லாலிகார்த்திக், சத்தியராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து மதுபாட்டிலை உடைத்து ராஜனின் முகத்தில் குத்தியதோடு கருங்கல்லால் அவரது முதுகு, மார்பு ஆகிய இடங்களிலும் தாக்கி கொலை செய்தனர்.


இச்சம்பவம் குறித்து முனியன், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாலிகார்த்திக், சத்தியராஜ், ரவீந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


அரசு கல்லூரி மாணவரை அடித்துக்கொலை செய்த இரண்டு இளைஞருக்கு ஆயுள் தண்டனை


இந்நிலையில் இவ்வழக்கில் அணைத்து சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில்   தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கிய ஜோதி, குற்றம் சாட்டப்பட்ட லாலிகார்த்திக், சத்தியராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், ரவீந்திரனை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட லாலி கார்த்திக், சத்தியராஜ் ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கோதண்டபாணி ஆஜரானார்.


ஆயுள் தண்டனை (Life imprisonment)


ஆயுள் தண்டனை (Life imprisonment, life sentence, life-long incarceration அல்லது life incarceration) ஓர் தீவிரமான குற்றம் புரிந்த குற்றவாளி தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமையையும் சிறையில் இருக்குமாறுத் தரப்படும் குற்றவியல் தண்டனையாகும். கொலை, தேசத்துரோகம், போதைமருந்து கடத்துதல், பிறருக்கு ஊறு விளைவிக்குமாறு நிகழ்த்திய திருட்டு போன்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது.


இந்தத் தண்டனை அனைத்து நாடுகளிலும் கொடுக்கப்படுவது இல்லை. 1884ஆம் ஆண்டிலேயே போர்த்துக்கல் சிறை சீர்திருத்தங்களின்படி இந்தத் தண்டனையை விலக்கியது. இது தண்டனையாகக் கொடுக்கப்படும் பல நாடுகளிலும் சிறைநாட்களின் சில பகுதிகளை வெளியே வாழும்படி, தண்டனைக்காலத்தைக் குறைக்குமாறு வேண்டிக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான தண்டனை குறைத்தல் அல்லது "முன்னதான விடுதலை" குற்றவாளியின் சிறைக்கால நடத்தையை ஒட்டி சில நிபந்தனைகளுடன் அளிக்கப்படும்.