விழுப்புரம்: விழுப்புரம் அருகே, நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனது மகளை, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவரே கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளை கொலை செய்த தந்தை
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன். இவர் காவல் துறையில் உதவி ஆய்வாளராக (SI) பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் சுமலதா. ஆஸ்துமா உள்ளிட்ட கடுமையான சுவாசக் கோளாறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த சுமலதா, தனது கணவரைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தந்தை கோதண்டராமனின் பராமரிப்பில் வசித்து வந்தார்.
தொடர் சிகிச்சைக்குப் பின்னும் சுமலதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. மகள் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுவதையும், அவரது துயரத்தையும் கண்டு கோதண்டராமன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மகளைச் சரிவர கவனிக்க முடியவில்லையே என்ற விரக்தியும் அவருக்குள் இருந்துள்ளது.
இந்த நிலையில், இன்று ஆத்திரமும் வேதனையும் அடைந்த கோதண்டராமன், எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகள் சுமலதாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பின்னர், அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோதண்டராமனின் மனைவி அலறல் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துவிட்டு உடனடியாக கண்டமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சுமலதாவின் உடலையும், படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கோதண்டராமனையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது கோதண்டராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேறு ஏதேனும் குடும்பத் தகராறு காரணமா அல்லது மகளின் உடல்நல பாதிப்பு மட்டுமே காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாக்க வேண்டிய தந்தையே, மகளைக் கொன்ற சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைத் தடுப்பு உதவி எண்கள்:
மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், அதிலிருந்து விடுபட கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்: தமிழக அரசின் உதவி எண்: 104 (24 மணிநேர சேவை), சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 / 044-24640060, நிம்மதி தற்கொலை தடுப்பு மையம்: 1800-121-2030
"தற்கொலை எதற்கும் முடிவல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் இருந்தால் மேற்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனை பெறவும்."