விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், பிரம்மதேசம், ரோஷணை பகுதிகளில் பகல் நேரங்களில், பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து வந்தனர். இதுகுறித்த புகார்களின் பேரில், அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், திண்டிவனம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு திண்டிவனம் அகூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவரான திண்டிவனம் அடுத்த கோவடி பகுதியை சேர்ந்த வரும், தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருபவருமான கனகு என்கிற கனகராஜ் (வயது 38) என்பவர் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில், நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, கனகராஜ் மற்றும் அவருடன் சேர்ந்து மேலும் 2 பேர் தப்பி ஓடினார்கள். உடனே போலீசார் அவர்களை துரத்தி சென்று சுற்றி வளைத்து மடக்கிபிடித்தனர். விசாரணையில், கனகராஜுடன் தப்பி ஓட முயன்றது சென்னை அகரம் அடுத்த தென் சேலையூர் பகுதியை சேர்ந்த மோகன் என்கிற சகாயராஜ் (44) திருவல்லிக்கேணி அயோத்திய குப்பம் பகுதியை சேர்ந்த பாட்டில் மணி என்கிற மணிகண்டன் (31) என்பதும் தெரியவந்தது. இதில் சகாயராஜ் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளும், மணிகண்டன் மீது 16 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.


இவர்கள் 3 பேரும், வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நேரத்தில் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இவர்கள், திண்டிவனம் பகுதிக்கு வந்து, கூட்டாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திண்டிவனத்தில் 3 வீடுகளிலும், ரோஷனை பகுதியில் 2 வீடுகளிலும், பிரம்மதேசம் பகுதியில் ஒரு வீடு என்று மொத்தம் 6 இடங்களில் பகல் நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 36 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.