விழுப்புரம்: தேர்தல் செலவிற்காக வாங்கிய ரூ.60 லட்சம் பணத்தில் பாதி பணத்தை தராமல் மோசடி செய்து அடியாட்களை வைத்து கோட்டகுப்பம் தமிழக வெற்றி கழக நகர செயலாளர் மிரட்டுவதாக விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கோட்டக்குப்பத்தை சேர்ந்த ஆஷிக்அலி (வயது 31) என்பவர் தனது உறவினர்களுடன் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறேன். எனது நண்பரான கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒருவர், தொழில் விஷயமாகவும், வீட்டு பராமரிப்பு செலவிற்காகவும் ரூ.60 லட்சம் தரும்படி கேட்டார். சிறுவயதில் இருந்து நாங்கள் நண்பர்களாக பழகி வருவதால் நம்பிக்கையின் பேரில், கடந்த 2023 மார்ச் மாதம் எனது பெயரில் வங்கி கடன் பெற்று ரூ.60 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன்.
பணத்தைப்பெற்ற அவர், கடன் தொகைக்கு மாத தவணை கட்ட எனக்கு ரூ.20 லட்சத்து 29 ஆயிரத்து 732-ஐ அனுப்பினார். பின்னர் அவர், கடந்த 6 மாதமாக சரியான முறையில் எனக்கு கடன் தொகை கட்ட பணத்தை அனுப்பாமல் ஏமாற்றி வருகிறார். எனது நண்பர் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தில் உள்ளார்.
ரவுடிகளை வைத்து எனக்கு கொலை மிரட்டல்
அவரிடம் சென்று பணம் தரும்படி கேட்டதற்கு அவர், ரவுடிகளை வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனக்கு சேர வேண்டிய ரூ.46 லட்சத்தை தருவதாக கூறி எனக்கு முத்திரைத்தாளில் எழுதிக்கொடுத்தார். ஆனால் இதுநாள் வரையிலும் எனக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது விசாரணை செய்து சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தார்.
த.வெ.க நிர்வாகி பதில்
இதுகுறித்து த.வெ.க நிர்வாகி முகமது கவுஸ்யிடம் கேட்டபோது, பணம் வாங்கியது உண்மைதான். ஆனால் பாதி பணம் கொடுத்து விட்டேன் மீதி பணமும் கொடுத்து விடுவேன். அதற்குள் என் மீது புகார் கொடுத்துள்ளார் என தொலைபேசி வாயிலாக விளக்கம் கொடுத்துள்ளார்.