விழுப்புரம்: விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பயன்படுத்தப்படாத இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் பணம் மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் தீயணைப்பு துறையினர், டிரிலிங் மிஷினை கொண்டு ஸ்பீடா மீட்டரை இயக்கி சரிசெய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அரசு துறை அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை பல்வேறு வகையில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மேற்கொள்ளும் மோசடிகள் அதிகஅளவில் வெளியில் தெரிவதில்லை.


இந்த நிலையில் தான், விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் தீயணைப்பு துறையினருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தாமலேயே நாள் தோறும் பயன்படுத்தியதாக 'லாக் புக்' எனப்படும் பதிவேடு புத்தகத்தில் பொய்யான தகவல்களை எழுதுவதும், ஓட்டப்படாத வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் பயன்படுத்தியாக கூறி பணம் மோசடி முறைகேடுகளில் ஈடுபட்டும், வாகனங்கள் பயன்படுத்தியது போன்றும், அதிகாரிகளை நம்ப வைக்க டிர்லிங் மெஷினை கொண்டு பயன்படுத்தபடாத இருசக்கர வாகனத்தின் ஸ்பீடா மீட்டரை இயங்க வைக்கும் வீடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பல்வேறு அரசு துறையில் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் இது போன்ற ஏமாற்று வேலைகள் நடந்து வருவதும் தெரியவந்துள்ளது. எனவே அரசு துறைகளில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரையிலான செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.