விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன. சலீம்கான் என்பவர், இக்காப்பகத்தில் சேர்க்கப்பட்ட வயதான தனது மாமாவை காணவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.


உரிய அனுமதியின்றி இயங்கிய ஆசிரமம்:-


அதில், உரிய அனுமதியின்றி இந்த ஆசிரமம் நடைபெற்று வருவது தெரியவந்தது. இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக உரிய அனுமதியின்றி இயங்கிய ஆசிரமத்திற்கு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சென்று வந்துள்ளனர். அரசு அதிகாரிகள் சென்ற நேரத்தில் இவை அனுமதி உடன் இயங்காத என கண்காணிக்காமல் சென்று வந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிபிசிஐடி:


இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டார். இந்த நிலையில் சிபிசிஐடி தனது விசாரணையை துவங்கியுள்ளது. சிபிசிஐடி எஸ்பி அருண் பாலகோபாலன் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் விசாரணை தொடங்கி ஆசிரமத்திலிருந்த முக்கிய ஆவணங்கள் தடயங்களை சேகரித்தனர்.


சிகிச்சை:-


ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உட்பட 203 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 99 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 44 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். மீதம் உள்ள 60 பேர் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வளத்தி, கடலூர் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலை கோட்டக்குப்பத்தில் இந்த ஆசிரமத்தின் கிளையிலிருந்த 25 பேர் மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அன்பு ஜோதி ஆசிரமம், அரசின் எவ்வித அனுமதியும் இன்றி கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது.


தேசிய மகளிர் ஆணையம்:-


அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கினைப்பாளர் காஞ்சன் கட்டார்  விசாரணை செய்து  இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண்களை தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் மற்றும் மகளிர் ஆனைய வழக்கறிஞர் மீனாகுமரி நேரில் பார்வையிட்டு ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரனை செய்து வீடியோவாக பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்று கொண்டனர்.


அடக்கம் செய்த பிணங்கள் அனாதை பிணங்களா?


மேலும், அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற பிணங்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை அடக்கம் செய்துள்ளோம் என ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபினின் மனைவி மரியா ஜூபின் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தற்போது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு மற்றும் ஆட்கடத்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வருவதால், இவர்கள் அடக்கம் செய்த பிணங்கள் அனைத்தும் அனாதை பிணங்கள் தானா என சந்தேகம் எழுந்துள்ளது. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டால் அனைத்து  உண்மையும் வெளிவரும் என தெரிகிறது.