சிவகாசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு தூண்டிய திடுக்கிடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ அடிப்படையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.




சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் குடியிருந்த அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியினர் லிங்கம்- பழனியம்மாள். இவர்களின் மகன் ஆதித்யா. மகள் ஆனந்தவல்லி. ஆனந்த வள்ளியின் 3 மாத பெண் குழந்தை சஷ்டிகா. இவர்கள் 5 பேரும் கடந்த 23-ம் தேதி வியாழக்கிழமை பூட்டிய வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டு இறந்து  கிடந்தனர்.  தகவலறிந்த திருத்தங்கல் போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து 5 பேர்களின் தற்கொலைக்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் மேல் விசாரணை நடத்தி வந்தனர்.


Exit Poll Results 2024 LIVE: மக்களவைத் தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ன சொல்லுது? உடனுக்குடன் அப்டேட்ஸ்




விசாரணையில் லிங்கம் குடும்பச் செலவுக்காகவும், குடும்பத்திலுள்ளவர்களின் மருத்துவச் செலவுக்காகவும், மகளின் திருமணத்திற்காகவும், பலரிடமும் ரூபாய் ஒரு கோடிக்கும் மேலாக கடன் பெற்றதாக தெரிய வந்தது. கடனாக பணம் கொடுத்த நபர்கள் அனைவரும் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்கவே, ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர் லிங்கம் தற்கொலைக்கு முயன்று, திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்.




அப்போது அவர் போலீசாரிடம் தந்திருந்த வாக்குமூலத்தில் தான் யார்- யாரிடம் கடன் தொகை பெற்றிருந்தேன். யார் யாரெல்லாம் கந்து வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள். வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு செலுத்த முடியாத நிலையில் தன்னை யார்- யாரெல்லாம் இழிவாக பேசினார்கள் என்பது பற்றி விளக்கமாக ஆசிரியர் லிங்கம் பேசிய வீடியோ காட்சி ஆடியோவுடன் வெளியானது. இதன் காரணமாக விழித்துக் கொண்ட போலீசார் அதனை தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர்களான லிங்கம் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில்,  கடன் கொடுத்த நபர்கள் கந்து வட்டி கேட்டு லிங்கம் குடும்பத்தினரை மிரட்டி நெருக்கடி கொடுத்தது தெரிய வந்தது. வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி கட்டி வந்த பட்சத்தில், கடன் கொடுத்த நபர்கள் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லிங்கம் மன அழுத்தத்தில் தனது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில்  வெளிச்சத்திற்கு வந்தது.




கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால் ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் லிங்கம் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரிடம் போலீசார் பெற்ற வாக்குமூல வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் தான் யார்- யாரிடம், எந்தெந்த நபர்களிடம் எவ்வளவு தொகை கடன் தொகை பெற்றேன். யாரெல்லாம் கந்து வட்டி கேட்டு மிரட்டினார்கள். பணம் திரும்ப கொடுக்க முடியாத நிலையில் யார்- யாரெல்லாம் தன்னை இழிவாக பேசினார்கள் என்பது பற்றி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த ஆசிரியர் லிங்கம் பேசிய வீடியோ ஆடியோவுடன் வெளியானது.




இதன் மூலமாக ஆசிரியர் லிங்கம் குடும்பத்தினர் கந்து வட்டியால் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்கள் விசாரணையை முடுக்கி விட்டிருந்த நிலையில், தாங்கள் பதிவு செய்திருந்த தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றி, லிங்கத்திற்கு கடன் கொடுத்து விட்டு, பெரும்பாலான தொகையாக வட்டி பெற்றதுடன், பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததாக எம். புதுப்பட்டி கிராம மேலத்தெருவை சேர்ந்த முருகன் (வயது 52) மணிவண்ணன் (வயது 44), திருத்தங்கல் பூங்கா தெரு கிருஷ்ணன் (வயது 42), சித்துராஜபுரம் கொங்கலாபுர முருகன் (வயது 57) சித்துராஜபுரம் சத்யா நகர் ரமேஷ்குமார் ( வயது 44), திருவில்லிபுத்தூர் கோட்டை தலைவாசல் அருண்குமார் ( வயது 43) ஆகிய 6 நபர்களை திருத்தங்கல்  போலீசார் கந்துவட்டி, தற்கொலைக்கு தூண்டியது என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.


தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் லிங்கம் மொத்தம் 41 நபர்களிடம் கடன் பெற்ற நிலையில், கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்த 6 நபர்கள் மட்டுமே முதல் கட்ட விசாரணையில் கைது நடவடிக்கை செய்யப்பட்டுள்ள பட்சத்தில், இவ் வழக்கில் மீண்டும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று கந்துவட்டி வழக்கு விசாரணை வளையத்திற்குள் மேலும் பலர் சிக்குவார்கள் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.