விழுப்புரத்தில் போலீசாருக்கு பயந்து போலி மதுபாட்டில்கள் கடத்தி வந்த இரண்டு பேர் ஓடும் மினி லாரியில் இருந்து ஓடும்போதே தப்பி ஓட்டம் பிடித்தனர். விபத்துக்குள்ளான மினி லாரி மற்றும் அதிலிருந்த 7,440 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அடுத்த செங்கராம்பாளையத்தில் மதுவிலக்கு சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடி வழியாக, இன்று காலை புதுச்சேரியில் இருந்து, விழுப்புரம் நோக்கி மினி லாரி ஒன்று வந்துள்ளது.  சந்தேகத்தின் அடிப்படையில், அங்கு பணியில் இருந்த போலீசார், இந்த மினி லாரியை நிறுத்த முற்பட்டுள்ளனர். அப்போது, இந்த மினி லாரி நிற்காமல் சென்றதால், போலீசார் அதனை பிடிப்பதற்காக துரத்திச் சென்றனர்.


இந்நிலையில், வளவனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்றபோது, ஓடும் மினி லாரியில் இருந்து அதன் ஓட்டுனரும், அவருடன் இருந்த உதவியாளரும் கீழே எகிறி குதித்து, தப்பியோடி விட்டனர். இதையடுத்து, மினி லாரி ஆளே இல்லாமல் சிறிது தூரம் சாலையில் வேகமாக ஓடி, பின்னர் சாலையோரம் இருந்த மதில் சுவரில் மோதி நின்றது. பின்னர் மினி லாரியை துரத்தி வந்த மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், லாரியை சோதனை செய்தனர்.


அப்போது, லாரியில் 155 அட்டைப் பெட்டிகளில் 7,440 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் போலவே, புதுச்சேரியில் இருந்து போலியாக மதுபாட்டில்கள் தயார் செய்து, அதனை தமிழகத்தில் சுற்றுலாத்தலமாகத் திகழும் ஏற்காடு உள்ளிட்ட மலை பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல முற்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.


சாலையோரம் இருந்த மதில் சுவரில் மோதி நின்ற மினி லாரியின் முன்பக்கம் முழுவதுமாக சேதம் அடைந்துபோனதை அடுத்து, டிராக்டரைக் கொண்டு அதனை வெளியே இழுத்து, டிராக்டர் மூலம் விழுப்புரத்தில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு  கொண்டுவரப்பட்டது.