விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது:
விழுப்புரம் வி.மருதூர் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் 115 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் இருவரும் விழுப்புரம் வி.மருதூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பாலசுந்தரம் (வயது 22), வி.மருதூர் வெங்கடகிருஷ்ணா லே-அவுட் பகுதியை சேர்ந்த ஸ்ரீதனுஷ் (22) என்பதும், இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது :
விழுப்புரம்: திண்டிவனம் பகுதியில் சிலர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருவதாக திண்டிவனம் உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திண்டிவனம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பூதேரி பகுதியில் சந்தேகத்திடமான வகையில் காரின் முன்பு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பூதேரி செந்தமிழ் நகரை சேர்ந்த சாதிக்பாஷா மகன் ரகமத்துல்லா (வயது 22), சென்னை அண்ணாநகர் பாடிகுப்பம் காந்திநகர் பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் பிரவீன் (19) ஆகியோர் என்பதும், காரில் லேப்டாப், செல்போன்களை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் லாட்டரிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 செல்போன், 2 லேப்டாப் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த ரெட்டணை கிராமம் ராஜீவ் நகரை சேர்ந்தவர்கள் லோகு மகன் ஸ்ரீகாந்த் (வயது 23), வெங்கடேசன் மகன் சஞ்சய் என்கிற ராமலிங்கம் (21). இவர்கள் மீது மயிலம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட முப்புளி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஸ்ரீகாந்த், சஞ்சய் ஆகிய இருவரையும் மயிலம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர்கள் இருவரும் இதுபோன்று பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஸ்ரீகாந்த், சஞ்சய் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்ரீகாந்த், சஞ்சய் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் இருவருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.