விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (வயது 26). இவர் இணையத்தில் வேலை தேடியதில் 'வொர்க் ஃப்ர்ம் ஹோம்' என்ற லிங்கை உபயோகித்து வேலை தேடியுள்ளார். இதன் மூலம் அவருக்கு வந்த அழைப்புகளில் இருந்து வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளங்கள் வழங்கப்பட்டதாகவும், இதனால் இவர் முன்பணமாக சிறிது சிறிதாக ரூ.2 லட்சத்து 415-ஐ கூகுள்பே மூலம் சம்பந்தப்பட்ட லிங்கில் இருந்து அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் அவர் வேலை செய்தும் சம்பளம் மற்றும் அவர் கட்டிய முன்பணம் திருப்பித்தராததால், இதுபற்றி அஞ்சு, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட இணையத்தில் விசாரணை செய்தும் புகார் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அதிலிருந்து புகார்தாரர் அனுப்பிய ரூ.2 லட்சத்தை மீட்டு மீண்டும் அஞ்சுவின் வங்கி கணக்கிலேயே திருப்பி செலுத்தப்பட்டது. அதற்கான காசோலையை அஞ்சுவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வழங்கினார்.
ஆன்லைனில் மோசடி எச்சரிக்கை :
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டது. படித்த இளைஞர்களுக்கு அவர்கள் கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலைகள் கிடைப்பதில்லை. இதனால் இளைஞர்கள் கிடைத்த வேலையை செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். சிலர் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சில மோசமான இணைய செயலிகள் மூலம் ஏமாற்றம் அடைகின்றனர். கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏராளமான மக்கள் வேலைகளை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களை குறித்து வைத்து பல டிஜிட்டல் தளங்கள் பண மோசடியில் ஈடுபடுகிறது.
வேலையில்லா நபர்கள் வேலை பெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து அதில் தங்கள் முழு விபரங்களையும் கொடுக்கின்றனர். இதை வைத்து மோசடி செய்யும் நபர்கள் வேலை தேடும் நபர்களின் தொலைபேசி எண்களை கைப்பற்றி அதன் மூலம் அவர்களிடம் தொடர்பு கொண்டு பெரிய நிறுவனங்களில் பணி வாங்கி தருவதாக ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று ஓடி விடுகின்றனர். மோசடி செய்யும் நபர்கள் ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். 1 ரூபாய் முதலீடு செய்தால் 100 ரூபாய் இலாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்