விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள காவனிப்பாக்கம் மலட்டாற்றில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சார்ந்த தெய்வக்கன்னு என்பவரை தாலுகா போலீசார் கைது செய்தனர். தன்னுடன் தகாத உறவிலிருந்து விலகி வேறொருவருடன் சென்றதால் ஆத்திரத்தில் பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 


விழுப்புரத்தில் கொலை 


விழுப்புரம் மாவட்டம் அரியலூர் கிராமத்தை சார்ந்த வசந்தி என்பவருக்கும் பன்ருட்டி ரெட்டிக்குப்பம் கிராமத்தை சார்ந்த குப்புசாமி என்பவருக்கும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகளுடன் ரெட்டிக்குப்பத்தில் வசித்து வருகின்றனர். வசந்தி விழுப்புரத்தில் துணி கடை நடத்தி வருவரின் வீட்டில் வீட்டு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி விழுப்புரம் அரியலூரில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு சென்றவர் கணவர் வீட்டிற்கு செல்லாமல் காணாமல் போயுள்ளார்.


திருமணத்தை மீறிய உறவு 


இதனையடுத்து வசந்தியின் கணவர் குப்புசாமி தனது மனைவியை காணவில்லை என புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் அரியலூர் அருகேயுள்ள காவனிபாக்கம் மலட்டாற்றில் முழுவதுமாக எரிந்த நிலையில் வசந்தி சடலமாக கடந்த 19.03.24 அன்று மீட்கப்பட்டு தாலுகா போலீசார் விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் ரெட்டிப்பாளையம் பகுதியை சார்ந்த தெய்வக்கண்ணு என்பவருடன் வசந்தி திருமணத்தை மீறிய உறவில் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளார். திடீரென வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டு தெய்வக்கன்னுடன் பழகுவதை நிறுத்திவுள்ளார்.


கழுத்தை நெறித்து கொலை


இதனால் ஆத்திரமடைந்த தெய்வக்கன்னு வசந்தியை கடந்த 4 ஆம் தேதி காவணிப்பாக்கம் மலட்டாற்றிலுள்ள முட்புதருக்கு அழைத்து சென்று கம்பங்கூழில் மயக்க மருந்து கலந்து அவருடன் தனிமையில் இருந்து உள்ளார். அதன் பிறகு வசந்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வசந்தியின் உடல் அங்கு பத்து நாட்களாக ஆற்றில் கிடந்து தூர்நாற்றம் வீசியதால் நான்கு தினங்களுக்குமுன் முட்புதரில் உடலை வைத்து எரித்ததாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனையடுத்து தெய்வக்கண்ணுவை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.