விழுப்புரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கட்டிட தொழிலாளிக்கு மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கொன்ற மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறு - கட்டிட தொழிலாளி கொலை
விழுப்புரம் அருகே உள்ள வி.சித்தாமூரை சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 14-ந் தேதி இரவு விழுப்புரம் இந்திரா நகர் புறவழிச்சாலை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் செல்வநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மணிகண்டன் மரணம் தொடர்பாக அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மணிகண்டனின் மனைவி தமிழரசிக்கும் (25), வேறொருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்தது.
தீவிர விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அதனடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் பதிவாகியுள்ள செல்போன் எண்களை சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் சேகரித்து அதன்படி விசாரித்ததில் 2 பேரின் செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதை வைத்து அந்த நபர்கள்தான் மணிகண்டனை கொலை செய்திருக்கலாம் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதுசம்பந்தமாக போலீசார், வி.சித்தாமூர் கிராம மக்கள் பலரிடம் விசாரணை நடத்தியதில், மணிகண்டனின் மனைவி தமிழரசிக்கும், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை அடுத்த திருக்காச்சூரை சேர்ந்த சங்கர் (52) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததும், இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை நடந்துள்ளதும் தெரியவந்தது.
கள்ளக்காதல் விவகாரம்
இதையடுத்து தமிழரசியையும், அவர் கொடுத்த தகவலின்பேரில் சங்கரையும் போலீசார் மடக்கிப்பிடித்து இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். விசாரணையில் மணிகண்டனை கொலை செய்ததை அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்
மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் கடந்த 6 ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் கட்டிட மேஸ்திரியான சங்கருக்கு கீழ் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது சங்கருக்கும் தமிழரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. தமிழரசியை விட சங்கர் 27 வயது மூத்தவர். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் வயது மீறிய கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். மணிகண்டன் வேலைக்கு செல்லும் சமயத்தில் தமிழரசியும், சங்கரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறு
இந்த விஷயம் மணிகண்டனுக்கு தெரியவரவே அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். தனது மனைவியை பலமுறை கண்டித்தபோதிலும் சங்கருடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் தனது மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்து, இங்குள்ள சுற்றுவட்டார பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். ஆனால் தமிழரசி, தனது கணவரிடம், சென்னைக்கு சென்று கட்டிட வேலை செய்யலாம் என்று அடிக்கடி கூறி வந்துள்ளார். அதற்கு மணிகண்டன் மறுத்துள்ளதால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து வந்த பிறகும் சங்கருடன் அடிக்கடி தமிழரசி செல்போனில் பேசி கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார்.
இதையறிந்ததும் மணிகண்டன், தமிழரசியை அடித்து உதைத்துள்ளார். இதனால் மணிகண்டன் மீது தமிழரசிக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர், சங்கரை தொடர்புகொண்டு கூறியுள்ளார். மணிகண்டன் உயிரோடு இருந்தால் நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது, அவரை தீர்த்துக்கட்டினால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்று இருவரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதற்கு சங்கர், தனது உறவினர்களான திருக்காச்சூரை சேர்ந்த கார்த்திக்ராஜா (25), அவரது மனைவி சுவேதா (21), தனது கடையில் பணியாற்றி வரும் செஞ்சி அருகே கோணையை சேர்ந்த சீனிவாசன் (35) ஆகியோரின் உதவியை நாடியுள்ளார். அதற்கு அவர்கள் 3 பேரும் ஒப்புக்கொண்டனர்.
சயனைடு
சீனிவாசன், ஏற்கனவே நகை வேலை செய்து வந்து அந்த வேலையில் இருந்து நின்றுவிட்ட நிலையில் நகை வேலை செய்பவர்கள் பயன்படுத்தும் சயனைடை கொடுத்து மணிகண்டனை கொலை செய்துவிடலாம் என்று சங்கருக்கு யோசனை கூறியுள்ளார். மணிகண்டனுக்கு ஏற்கனவே மது குடிக்கும் பழக்கம் உண்டு என்பதால் மதுபானத்தில் சயனைடை கலந்து கொடுத்து கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி சீனிவாசன், தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் மூலமாக சயனைடு வாங்கினார்.
பின்னர் சம்பவத்தன்று மணிகண்டனை சுவேதா செல்போன் மூலம் தொடர்புகொண்டு, கட்டிட வேலை விஷயமாக பேசி முன்பணம் வாங்கிச் செல்லுமாறு கூறி விழுப்புரம் இந்திரா நகர் புறவழிச்சாலை அருகில் வரவழைத்துள்ளார். அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மணிகண்டனை சுவேதா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சுவேதாவுடன் வந்திருந்த அவரது கணவர் கார்த்திக்ராஜா, சீனிவாசன் மற்றும் கார்த்திக்ராஜாவின் நண்பர் ஆகிய 3 பேரும் சேர்ந்து மணிகண்டனிடம் கட்டிட வேலை விஷயமாக நைசாக பேச்சுக் கொடுத்துள்ளனர்.
மதுவில் கலந்துகொடுத்து கொலை
அதன் பிறகு சுவேதா சற்று தூரம் தள்ளிச்சென்று செல்போனில் பேசிக்கொண்டிருக்க மணிகண்டனுடன் சீனிவாசன், கார்த்திக்ராஜா, அவரது நண்பர் ஆகிய 3 பேரும் அமர்ந்து மது அருந்தினர். பின்னர் சிறிது நேரத்தில் மணிகண்டனின் கவனத்தை திசைதிருப்பி அந்த மதுபானத்தில் சயனைடை கலந்து கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். அதை குடித்த மணிகண்டன் அடுத்த சில நிமிடத்தில் கீழே சாய்ந்து இறந்துள்ளார். உடனே அங்கிருந்து அவர்கள் 4 பேரும் ஒன்றும் தெரியாததுபோல் நைசாக தப்பிச்சென்று விட்டனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையே சங்கரும், தமிழரசியும் கொடுத்த வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர். தொடர்ந்து, அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சுவேதா, சீனிவாசன் ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
மனைவி உள்பட 4 பேர் கைது
இதையடுத்து சங்கர், தமிழரசி, சீனிவாசன், கார்த்திக்ராஜா, சுவேதா உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், சங்கர், தமிழரசி, சீனிவாசன், சுவேதா ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை, விழுப்புரம் மாஜிஸ்திரட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் கார்த்திக்ராஜாவையும், அவரது நண்பரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிர்கதியான 2 குழந்தைகள்
மணிகண்டன்- தமிழரசி தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். வயது மீறிய கள்ளக்காதலால் தமிழரசி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார். தற்போது தமிழரசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்த குழந்தைகள் இருவரும் தந்தையின்றியும், தாயின் அரவணைப்பு இல்லாமலும் நிர்கதியாக தவித்து வருகின்றனர்.
மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுவனின் மூலம் துப்பு துலங்கியது
மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுவனின் மூலம் துப்பு துலங்கியது, மணிகண்டன், அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு இறந்து விட்டதாக அவரது மனைவி தமிழரசி, போலீசில் புகார் கூறியிருந்தார். ஆனால் சம்பவத்தன்று மணிகண்டன், தனது உறவினரான, சற்று மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுவனை, விழுப்புரம் இந்திரா நகர் புறவழிச்சாலை அருகில் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவனை பார்த்ததும் சீனிவாசன், கார்த்திக்ராஜா, சுவேதா உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனே அச்சிறுவனை சற்றுதூரம் அழைத்துச்சென்று ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு வந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த சிறுவன், மணிகண்டனை தேடி வந்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. அங்கிருந்த 4 பேரையும் காணவில்லை. இதுபற்றி அப்படியே போலீசாரிடம் அந்த சிறுவன் கூறியுள்ளான். சற்று மனவளர்ச்சி பாதிக்கப்பட்டவனாக அந்த சிறுவன் இருந்தாலும் அவன் கூறிய விஷயங்களும் மணிகண்டனின் மரணத்திற்கு துப்பு துலக்க போலீசாருக்கு பெரிதும் உதவியுள்ளது.