விழுப்புரம்: பழைய இரும்புகளை உடைக்கும் தொழில் செய்ய திண்டிவனம் முன்னாள் நகரமன்ற தலைவரிடம் 76 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த இருவரை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த முன்னாள் நகரமன்ற தலைவரான வெங்கடேசனிடம் கடந்த 2021-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டம் புக்கத்துறையை சேர்ந்த ராஜேஷ் மற்றும் புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் இருவரும், வெங்கடேசனிடம் பழைய இரும்புகளை உடைக்கும் தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறி அதற்காக 80 லட்சம் கடனாக தரும்படியும் பணத்தை 5 நாட்களுக்குள் திருப்பித்தருவதாகவும் கூறியுள்ளனர். அதனை நம்பிய வெங்கடேசன், கடந்த 25.9.2021 அன்று தனக்கு தெரிந்த திண்டிவனத்தை சேர்ந்த சுப்புராயலு என்பவரிடம் இருந்து கடனாக 65 லட்சம் பெற்று அன்றைய தினமே அத்தொகையை கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை ராஜேஷ், விஜயகுமார் மற்றும் விஜயகுமாரின் உறவினரான புதுச்சேரி மனப்பட்டை சேர்ந்த பிரபு ஆகியோர் காரில் வந்து பெற்றுச்சென்றனர். அதன் பிறகு சில நாட்கள் கழித்து வெங்கடேசனை அவர்கள் தொடர்புகொண்டு உடனடியாக 11 லட்சம் வேண்டும் என்றும், பழைய இரும்புகளை மொத்தமாக வாங்கியதற்காக ஒரு தொகை வர வேண்டியுள்ளது, அந்த தொகைக்கு ஜி.எஸ்.டி. கட்டினால் தொகை வந்துவிடும், எனவே ஜி.எஸ்.டி. கட்ட 11 லட்சம் தேவைப்படுகிறது என்றும், இந்த தொகையை 10 நாட்களில் தந்து விடுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்பிய வெங்கடேசன், தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து பணத்தை பெற்று அதனை 22.11.2021 அன்று ராஜேசுக்கு கொடுத்துள்ளார்.
இவ்வாறாக 76 லட்சத்தை பெற்ற ராஜேஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து பல மாதங்கள் ஆகியும் வெங்கடேசனுக்கு கடன் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 5.3.2023 அன்று ராஜேஷ், விஜயகுமார் ஆகிய இருவரும் திண்டிவனம் சலவாதி பகுதிக்கு வருமாறு வெங்கடேசனை அழைத்தனர். அதன்படி அங்கு வந்த வெங்கடேசன், தனது பணத்தை திருப்பித்தருமாறு வற்புறுத்தி கேட்டார். அதற்கு ராஜேஷ், விஜயகுமார், பிரபு ஆகிய 3 பேரும் சேர்ந்து வெங்கடேசனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதோடு பணத்தை திருப்பிக்கேட்டால் கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வெங்கடேசன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ராஜேஷ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து தலைமறைவாக உள்ள பிரபுவை தேடி வருகின்றனர்.