விழுப்புரம்: மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதால் விஷம் கலந்த தோசையை கொடுத்து வாலிபரை கொன்று நாடகமாடிய கள்ளக்காதலி, தாய் கைது செய்யப்பட்டனர்.
கார் டிரைவர் கொலை
விழுப்புரத்தை அடுத்த குமளம் அருகே சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் விஸ்வலிங்கம் (வயது 29), கார் டிரைவர். இவர் கடந்த 17-ந்தேதி மாலை அவரது வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய மார்பு, கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன.
இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், விஸ்வலிங்கத்தை யாரோ அடித்துக்கொலை செய்திருப்பதை உறுதி செய்தனர். மேலும் விசாரணையில், திருக்கோவிலூர் அருகே மேலத்தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி (25) என்பவரை விஸ்வலிங்கம் திருமணம் செய்துகொள்ளாமலே அவரை தனது வீட்டில் தங்கவைத்து கணவன்- மனைவிபோல் குடும்பம் நடத்தி வந்ததும், விஸ்வலிங்கம் கொலை செய்யப்பட்டதற்கு பிறகு செல்வி அங்கு இல்லாததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸ்
இதன் அடிப்படையில் விஸ்வலிங்கத்தை செல்வி கொலை செய்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், செல்வியை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்த சூழலில் நேற்று திருக்கோவிலூர் பகுதியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற செல்வியை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்....
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வலிங்கம், திருக்கோவிலூர் மேலத்தாழனூர் பகுதிக்கு கார் சவாரிக்காக சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த செல்விக்கும், விஸ்வலிங்கத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே கள்ளக்காதலாக மலர்ந்தது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். பின்னர் செல்வியை விஸ்வலிங்கம் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று கணவன்- மனைவிபோல் குடும்பம் நடத்தி வந்தார்.
விஸ்வலிங்கத்திற்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு செல்வியிடமும், தனது தாய் முனியம்மாளிடமும் (64) தகராறு செய்து வந்துள்ளார். மேலும் விஸ்வலிங்கம், அவ்வப்போது மது குடிக்க பணம் தரும்படி கேட்டு செல்வி, முனியம்மாள் ஆகிய இருவரையும் தகாத வார்த்தையால் திட்டி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். விஸ்வலிங்கத்தின் தொந்தரவை தாங்கிக்கொள்ள முடியாமல் துன்பப்பட்ட செல்வி, விஸ்வலிங்கத்தை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். அதற்கு, தனது மகன் என்றுகூட பாராமல் முனியம்மாளும் ஒப்புக்கொண்டார்.
விஷம் கலந்த தோசை
இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த விஸ்வலிங்கம், தனது தாய் முனியம்மாள் மற்றும் செல்வி ஆகிய இருவரிடமும் தகராறு செய்து அடித்து துன்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் வீட்டில், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து தோசை மாவில் கலந்து தோசை சுட்டு விஸ்வலிங்கத்துக்கு கொடுத்துள்ளனர். போதையில் இருந்த அவரும் விஷம் கலந்திருப்பது தெரியாமல் அந்த தோசையை சாப்பிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாயில் நுரைத்தள்ளி இறந்துள்ளார்.
அதன் பிறகு இந்த கொலையை மறைக்க செல்வி, முனியம்மாள் ஆகிய இருவரும் திட்டம் போட்டனர். அப்போதுதான், சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் விஸ்வலிங்கத்திற்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் கடும் தகராறு ஏற்பட்டுள்ளதை நினைவில் கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இருவரும், தகராறில் ஈடுபட்ட அந்த உறவினர்கள்தான் விஸ்வலிங்கத்தை கொலை செய்து விட்டதாக அனைவரையும் நம்ப வைக்கும் வகையில், விஸ்வலிங்கம் இறந்ததற்கு பிறகு அவரது உடலில் மார்பு, கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் கிழித்து நாடகம் ஆடியுள்ளனர்.
மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையே செல்வி, முனியம்மாள் ஆகிய இருவரும் கொடுத்த வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர்.
கள்ளக்காதலி, தாய் கைது
இதையடுத்து செல்வி, முனியம்மாள் ஆகிய இருவரின் மீதும் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை, விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.