புத்தாண்டு பிறந்ததிலிருந்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்துவருகிறது. அதிலும், பெரும்பாலும் அதிகளவில் உயர்ந்துகொண்டேதான் வந்தது. அந்த வகையில், இன்று ஒரு சவரன் விலை ரூ.60,000-ஐ கடந்துள்ளது.

தொடர்ந்து உயர்ந்துவந்த தங்கம் விலை

2025-ம் ஆண்டு தொடங்கி, ஜனவரி 1-ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.57,200-ஆக இருந்தது. அதன்பின்னர், 3ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. எனினும், 4ம் தேதி ரூ.360 குறைந்து, 7ம் தேதி வரை அதே விலையில் நீடித்தது. பின்னர், 8ம் தேதி சவரனுக்கு ரூ.80-ம், 9ம் தேதி ரூ.280-ம், 10-ம் தேதி ரூ.200-ம், 11-ம் தேதி ரூ.240-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,520 ரூபாயாக இருந்தது. அதைத் தொடர்ந்து சிறிய அளவில் உயர்ந்துவந்த தங்கம் விலை, 16ம் தேதி அதிரடியாக ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.59,120-க்கு விற்பனையானது. இந்த நிலையில், 17-ம் தேதி மீண்டும் ஒரு கிராமிற்கு ரூ.60 உயர்ந்து, கிராம் ரூ.7,450-க்கும், சவரன் தங்கத்தின் விலை, ரூ.59,600-க்கு விற்பனையானது.

ரூ.60,000-ஐ கடந்த தங்கம் விலை

ஜனவரி 18, 19 தேதிகளில் மிகச்சிறிய அளவில் குறைந்த தங்கம் விலை, சவரன் ரூ.59,480-க்கு விற்பனையான நிலையில், 20 மற்றும் 21-ம் தேதிகளில் முந்தைய விலையான ரூ.59,600-ல் நீடித்தது. இந்த நிலையில், இன்று(22.01.25) அதிரடியாக சவரனுக்கு 600 ரூபாய் விலை உயர்ந்து, 60 ஆயிரம் ரூபாயை கடந்து அதிர்ச்சியளித்துள்ளது.

அதன்படி, தங்கத்தின் விலை கிராமிற்கு 75 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,525 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 600 ரூபாய் விலை உயர்ந்து, ரூ.60,200-ஆகவும் உள்ளது. 

ரூ.104-ல் நீடிக்கும் வெள்ளி விலை

வெள்ளியின் விலை கடந்த 16-ம் தேதி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, ரூ.103-ஆக இருந்த நிலையில், 17-ம் தேதி மேரும் 1 ரூபாய் உயர்ந்து கிராம் ஒன்றிற்கு 104 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு அதே விலையில் தற்போது வரை நீடித்து வருகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை, ரூ.1,04,000-ஆக உள்ளது.