விழுப்புரம்: வளவனூர் அருகேயுள்ள தாதம்பாளையத்தில் விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயியை மர்ம நபர்கள் கழுத்தை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அடுத்த தாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் சத்தியராஜ் (40). விவசாயியான இவர், தனக்கு சொந்தமான வாழைத் தோட்டத்துக்கு இரவு நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் திங்கள்கிழமை நேற்று இரவு வாழைத் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றிருந்த சத்தியராஜ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.


ரத்த வெள்ளத்தில் கிடந்த விவசாயி


தந்தை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என அவரது மகன் பாலமுருகன் மற்றும் அவரது பாட்டி சுமதியுடன் வாழைத் தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சத்தியராஜ் கழுத்து மற்றும் உடலில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் இருந்தார். தந்தை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன் அருகிலுள்ள வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.


போலீஸார் நிகழ்விடம் சென்று விசாரணை


இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச், விக்கிரவாண்டி உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி.நந்தகுமார் மற்றும் வளவனூர் காவல் ஆய்வாளர் விஜயக்குமார் மற்றும் போலீஸார் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் சத்யராஜின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 


மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயம் சேகரிப்பு


விவசாய நிலத்திற்கு தண்ணீர்பாச சென்ற விவசாயை கொலை செய்த நபர் யாரென்று மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடங்களை சேகரித்து போலீசார் விசாரனை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். விவசாயில் நிலத்தில் விவசாயின் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.