பிரதமர் மோடி 74 வது பிறந்த நாள்
பிரதமர் நரேந்திர மோடியின் 74 ஆவது பிறந்த நாளை ஒட்டி பாஜக தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ,
பாஜக மாநில துணைத்தலைவர்கள் கரு நாகராஜன், விபி துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
பின்பு , பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர் ;
தமிழக பாஜக மற்றும் தமிழக மக்கள் சார்பாக மூன்றாவது முறையாக தேசத்தை வலிமையாக வழிநடத்தும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.தேசிய ஜனநாயக கூட்டணி 100 நாட்களைக் கடந்து சிறப்பான ஆட்சியை இந்தியாவிற்கு வழங்கி வருகிறது. தமிழக பாஜக இன்று உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்தியுள்ளது.பிரதமரின் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு நிர்வாகியும் 74 உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாள் தொடங்கி அக்டோபர் 2 காந்தி பிறந்தநாள் வரை சேவை வாரம் கொண்டாடப்பட உள்ளது. 100 நாட்களில் பதினைந்து லட்சம் கோடி ரூபாய் நல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் கோடி ரூபாய் தேசத்தின் அடிப்படை கட்டமைப்பை வலிமைபடுத்துவதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
கனிமொழி நன்றி கூட தெரிவிக்கவில்லை
மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டுகிறது எனும் கூறுகிறது தமிழக அரசு, ஆனால் உலகத்திலேயே சிறந்த துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தின் தரத்தை உயர்த்திய பிரதமர் மோடிக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நன்றி கூட தெரிவிக்கவில்லை. பெண்களுக்கு முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டிருந்த நாட்டில் பெண்களால் முன்னேற்றம் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழக அரசின் மாத மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கும் திட்டம் உதவி செய்யும் திட்டம் தான். ஆனால் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியது மத்திய அரசு தான். திட்டம் தொடங்கும் நாளன்றே திட்டம் எப்போது நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற தேதியையும் மத்திய அரசு வழங்குகிறது. 100 நாட்களில் 75 ஆயிரம் மருத்துவ சேர்க்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இது மருத்துவத் துறையில் செய்த புரட்சி.
இப்போது வரும் சினிமா படங்கள் 3 நாட்கள் ஓடி விட்டது என்று விளம்பரம் செய்யக்கூடிய நிலையில் 100 நாட்கள் பிரதமர் சிறப்பான ஆட்சியை இந்தியாவிற்கு வழங்கியுள்ளார். பாரத தேசத்தின் ஹீரோவாக பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருகிறார்.
திருமாவளவன் சிறுத்து போய் விட்டார்
சிறுத்தையாக ஆரம்பித்த திருமாவளவன் கடைசியில் சிறுத்துப் போய் இருக்கிறார். ஆட்சியில் பங்கு கேட்போம் என ஒரு வீடியோவை பரவ விட்டு விட்டு பின் , நான் போடவில்லை அட்மின் தான் போட்டார் என சினிமா போல நாடகத்தை நடத்தி வருகிறார். முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் சிறுத்து போய்விட்டார். திமுகவை மேடையில் வைத்துக் கொண்டு மதுவிலக்கை பற்றி எப்படி பேச முடியும். திருமாவளவனின் மதுவிலக்கு மாநாட்டிற்கு டாஸ்மாக் நடத்துபவர்கள் தான் ஸ்பான்சர்களாக இருக்கிறார்கள். திருமாவளவனின் மதுவிலக்கு மாநாடு தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஒத்துக் கொள்ளாத தமிழக அரசு தேசிய மதுவிலக்கு கொள்கையை கொடுத்தால் ஒப்புக்கொள்வார்களா. கருப்பு சட்டை போடுபவர்களுக்கு காவிகளின் சார்பில் வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் எதிர்மறை அரசியலைக் கொண்டு வந்தது திமுக தான். பொய்யையே அரசியலாக கொண்டவர்கள் திமுக காரர்கள்.
இந்தி யாத்திரை நடத்திய காங்கிரசை தோளில் சுமந்து கொண்டு திமுக அரசியல் நடத்தி வருகிறது.தேசிய கொள்கையை கொண்ட மாற்று சக்தி தமிழ்நாட்டில் வரவேண்டும்..
முதலமைச்சரின் ஒணம் வாழ்த்து கேள்வி எழுப்பிய தமிழிசை சவுந்தராஜன்
ஓணத்திற்கு வாழ்த்து சொல்லி இருந்த முதல்வரின் வாழ்த்து செய்தி இரு மொழிக் கொள்கையில் வருமா ? மும்மொழி கொள்கையில் வருமா ? தனியார் பள்ளிகளில் மும்மொழி கொள்கை இருக்கும்போது அரசு பள்ளிகளில் ஏன் இருமொழிக் கொள்கை என கேள்வி எழுப்பினார். ஏழைகளுக்கு ஒரு கல்வி ஏற்றம் பெற்றவர்களுக்கு ஒரு கல்வி, இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
விஜய் அரசியல் கட்சி - திமுக சாயலில் கட்சி தேவையில்லை
திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை. தமிழ்நாட்டில் தேசிய சாயலில்தான் கட்சி வர வேண்டும். விஜய் வேற்றுப் பாதையில் பயணிப்பாரென நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் இப்படித்தான் என காட்டிவிட்டார்.
உங்களுடைய வியாபாரத்திற்கு பலமொழி தேவை ஆனால் படிப்பிற்கு பல மொழி தேவை இல்லையா..இரு மொழி கொள்கை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏமாற்று வேலை. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் யாருக்கும் எந்த அங்கீகாரமும் கிடைக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் திமுக இருக்கிறது. திமுக பாதையில் விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக் கொண்டார். சாயம் வெளுகிறதா அல்லது வேறொரு சாயத்தை பூசி கொள்வாரா என்பது போகப் போக தான் தெரியும். ஒரு திரைப்படத்தை திரையிட விட வில்லை, ஒரு மாநாட்டை நடத்த விட மாட்டேங்கிறார்கள் தேசிய பக்கம் வந்தால் கூட பரந்த நிலைப்பாட்டோடு அழைத்துச் செல்வோம். ஆனால் திராவிட சாயத்தை பூசி கொண்டால் அவ்வளவுதான் என தெரிவித்தார்.
2026 ல் - வி.சி.க - த.வெ.க நாடகங்கள்
2026 ஆம் ஆண்டு தேர்தல் வருவதற்கு அதிக நாட்கள் உள்ளது, கூட்டணி குறித்து மத்திய தலைமை தான் முடிவு எடுக்கும். திருமாவளவன் என்ன பல்டி அடிக்கப் போகிறார், நடிகர் விஜய் என்ன நிறத்தை மாற்ற போகிறார் என நிறைய இருக்கிறது காலை மாலை இரவு என வெவ்வேறு மாதிரி இருக்கின்றனர். 2026 வரை விசிக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் பல நாடகங்கள் நடைபெற உள்ளது. இன்னும் நிறைய கூத்துக்களை நாம் பார்க்க இருக்கிறோம். இப்போது அமைதியாக இருந்து ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம்.