திருக்கனூர் அருகேயுள்ள சித்தலம்பட்டில் அடுத்தடுத்து இரு வீடுகளின் பூட்டினை உடைத்து 45 சவரன்  தங்க நகை மற்றும் 4 அரை லட்சம் ரொக்க பணம் வீட்டு உபயோக பொருட்களை டாடா ஏஸ் வாகனம் மூலம் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் திருக்கனூர் அருகேயுள்ள சித்தலம்பட்டில் சின்னசாமி என்பவர்  வத்தல் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனக்கு சொந்த ஊரான மதுரையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 2 ஆம் தேதி குடும்பத்துடன் சென்று இன்று அதிகாலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு பூட்டுகள் உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோவிலிருந்த 30 சவரன் தங்க நகை ஒரு லட்சம் ரொக்க பணம் மற்றும் 44 இன்ச் எல்இடி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை டாடா ஏஸ் வாகனம் மூலம் கொள்ளை அடித்து சென்றுள்ளது தெரியவந்தது.


இதனையடுத்து சின்னசாமி கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் சின்னசாமி வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது குறித்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் அப்பகுதியில் விசாரனை செய்தபோது சென்னை சென்றிருந்த கோதண்டராமன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை மற்றும் 3 அரை லட்சம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கட்சிகளை கைப்பற்றி விசாரனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இரு வீடுகளிலும் யாரும் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளதால் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அதிக அளவில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.