இந்திய பெண்கள் அணிக்கு 138 ரன்கள் இலக்கினை பாகிஸ்தான் பெண்கள் அணி நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய பெண்கள் அணி பேட்டிங்கில் சொதப்பியதால் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

  


வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரத்தில் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 13வது போட்டியில் இந்தியா – பாகிதஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி சில்ஹெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷபாலி வர்மா, மேக்னா சிங் இடம்பெறவில்லை. 


பாகிஸ்தான் அணியை பொருத்தவரை, நிடா டார் 37 பந்துகளில் ஐந்து பவுண்ட்ரி மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 56 ரன்கள் விளாசினார். மரூஃப் 32 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் குறிப்பிடும் படியான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. இந்திய அணியை பொறுத்த வரையில் சிறப்பாக பந்து வீசிய தீப்தி ஷர்மா நான்கு ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து, மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். பூஜா வஸ்ட்ராக்கர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய அணி மொத்தம் 6 பவுலர்களைக் கொண்டு இந்த போட்டியில் விளையாடியது.  தொடக்க ஓவர்களில் சொதப்பி வந்தாலும், இருபது ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் பெண்கள் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது.  






பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பெண்கள் அணி பேட்டிங்கிலும் கலக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து வந்தது. சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால், இந்திய பெண்கள் அணி பாகிஸ்தான் பெண்கள் அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதற்கு முன்பு நடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து வென்ற இந்திய பெண்கள் அணி, இந்த போட்டியிலும் வெல்லும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், 124 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 


பாகிஸ்தான் அணியைப் பொறுத்தமட்டில், நர்ஷா சந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். நிடா டார் மற்றும் சாய்தா இக்பால் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.