விழுப்புரம்: விழுப்புரத்தில் சிறுவனுக்கு தவறான பழக்கம் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து ஏன் ஊர் சுற்றுகிறாய் என பல அறிவுரை கூறிய இளைஞர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.


சிறுவனுக்கு அறிவுரை கூறிய இளைஞர் வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேலு என்பவரின் மகன் மாதவன் (வயது 20) கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் நண்பராக பழகி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் மாதவன் அந்த சிறுவனை அழைத்து சேவியர் காலனியைச் சேர்ந்த தவறான பழக்கம் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து ஏன் ஊர் சுற்றுகிறாய் என பல அறிவுரைகளை கூறியுள்ளார். இதனை அந்த சிறுவன், சம்மந்தப்பட்ட அந்த நபர்களிடம் கூறியுள்ளார். இதனால், அவர்கள் மாதவன் மீது ஆத்திரமடைந்துள்ளனர்.


வீட்டு வாசல் கதவின் மீது வீசி நாட்டு வெடிகுண்டை வெடிக்க வைத்த சிறுவன்


இந்நிலையில், நேற்று அதிகாலை சேவியர் காலனியைச் சேர்ந்த ரொசாரியா (வயது  20) ஜேம்ஸ் (வயது 25) துரைபாண்டி (வயது 24) ஆகியோருடன், அந்த சிறுவனும் சேர்ந்து, பட்டாசு தயாரிக்கும் மருந்து மூலம் நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதனை மாதவன் வீட்டு வாசல் கதவின் மீது வீசி நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். இதில் கதவு சேதமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


3 பேர் தலைமறைவு


இந்த சம்பவம் குறித்து மாதவன் சகோதரர் ஆதவன் விழுப்புரம் டவுன் காவல் நிலையஹ்டில் அளித்த புகாரின் பேரில், ரொசாரியா, ஜேம்ஸ், துரைப்பாண்டி, மற்றும் சிறுவன் ஆகிய 4 பேர் மீதும் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்து, காப்பகத்தில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடபுடைய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதால், அந்த 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.