திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கேபிஎன் காலனியைச் சேர்ந்தவர் ஹனிபா மகன் ஹாலிதீன். இவருடைய நெருங்கிய நண்பரான ஈரோட்டைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்காவில் தங்கி சுயத்தொழில் செய்து வருகிறார். இதையடுத்து, சலீம்கான் மாமா ஜபருல்லாவின் மனைவி, பிள்ளைகள் இறந்த நிலையில், அவர் யாருடைய பராமரிப்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சலீம்கான் தனது நண்பர்கள் உதவியுடன், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அன்புஜோதி ஆசிரமத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி ஜபருல்லாவை சேர்த்துள்ளார்.


இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் இருந்து ஈரோடு வந்த சலீம்கான், குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட தனது மாமா ஜபருல்லாவை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது, ஜபருல்லா ஆசிரமத்தில் இல்லை. இதுபற்றி, சலீம்கான் ஆசிரம இயக்குனர் அன்பு ஜூபினிடம் கேட்டபோது, பெங்களூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஜபருல்லாவை சேர்த்து விட்டதாகக் கூறியுள்ளார். அதன்படி, சலீம்கான் பெங்களூரில் உள்ள அந்த ஆசிரமத்திற்கு சென்று பார்த்தபோது, ஜபருல்லா அங்கேயும் இல்லை. இதுபற்றி, சலீம்கான் மீண்டும் அன்பு ஜோதி ஆசிரம இயக்குனர் அன்பு ஜூபினிடம் கேட்டபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலைத் தெரிவித்துள்ளார்.


இதனால் சந்தேகமடைந்த சலீம்கான் நண்பர் ஹாலிதீன், விழுப்புரம் மாவட்டம், கெடார் காவல் நிலையத்திற்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி கடிதம் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார். அப்புகாரின் பேரில், போலீசார் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, செஞ்சி் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ராஜம்பாள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கவேல் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள், புகாருக்குள்ளான குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் தற்போது திடீரென அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்திற்கு வரும் வெளியாட்களை இந்த குரங்குகள் விரட்டி, கடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாம். சில நேரங்களில், இந்த ஆசிரமத்தில் தங்கி இருந்து வருபவர்களையும் கடித்து குதறி வருகிறதாம். இதனால், ஆசிரமத்திற்கு வரும் வெளியாட்களும், ஆசிரமத்தில் தங்கி இருந்து வருபவர்களும் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது.


இந்த ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்களில் சிலர் காணாமல் போனதாகக் கூறி, பல்வேறு துறை அதிகாரிகள் இந்த ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இதனை வேடிக்கை பார்க்க வந்த சிலரையும், ஆசிரமத்தில் தங்கி இருந்த பலரையும் இந்த குரங்குகள் விட்டு வைக்கவில்லை. அவர்களை விரட்டி, துரத்தி, கடித்து குதறின. இதில் குறிப்பாக, ஆசிரம நிறுவனரையே இந்த குரங்குகள் கடித்து, குதறியதால் காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.