விழுப்புரம்: மரக்காணம் அருகே தூங்கிக் கொண்டிருந்த நபரை கல்லால் அடித்து கத்தியால் வெட்டி கொலை செய்த நண்பன், செல்போன் மறைத்து வைத்ததில் ஏற்பட்ட தகராறு காரணாமாக நடந்த கொலை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தூங்கிக் கொண்டிருந்த நபரை கல்லால் அடித்து கத்தியால் வெட்டி கொலை செய்த நண்பன்

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கார்த்திக் (30). இவர் மீது வேளச்சேரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் போலீசாரில் பிடியிலிருந்து தப்பிக்க கார்த்திக் வேளச்சேரியிலிருந்து கடந்த 6 மாதத்திற்கு முன் மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சிக்கு உட்பட்ட முதலியார் பேட்டை கிராமத்தில் உள்ள அவரது மாமன் முருகன் வீட்டில் வந்து தங்கி உள்ளார். இந்நிலையில் கார்த்திக் மற்றும் முதலியார் பேட்டை பகுதியை சேர்ந்த விநாயகன் மகன் ஏழுமலை (32) என்ற பிரகாஷ் ஆகிய இருவரும் உறவினர்கள் என்பதால் கடந்த சில மாதங்களாக ஒன்றாக சேர்ந்து நட்பாக பழகி வந்துள்ளனர். 
 
இந்நிலையில் கடந்த வாரம் கார்த்திக்கின் செல்போனை ஏழுமலை எடுத்து மறைத்து உள்ளார். இதனால் கார்த்திக் தனது செல்போனை கொடுக்குமாறு ஏழுமலையிடம் கேட்டுள்ளார். அப்போது ஏழுமலை "உனது செல்போனை நான் எடுக்கவில்லை" என கூறியுள்ளார். இதுகுறித்து கார்த்திக் அவரது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால் இவர்களில் உறவினர்கள் சமாதானம் பேசி ஏழுமலையிடம் இருந்த செல்போனை வாங்கி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக இதுவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை ஏழுமலை மரக்காணத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து மது வாங்கி குடித்து உள்ளார். போது அந்த இடத்தில் கார்த்திக்கும் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தன் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் ஏழுமலையின் தலையில் தாக்கி உள்ளார். இதில் ஏழுமலையின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. 
 
இந்த காயத்திற்கு ஏழுமலை மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் இது குறித்து ஏழுமலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. இந்நிலையில் இரவு ஏழுமலை வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு அவரது பாட்டி வீட்டின் பின்புறத்தில் உள்ள சிறிய கொட்டகையில் தனியாக படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை ஏழுமலை படுத்து தூங்கிய கொட்டகை பகுதியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் அந்த கொட்டகை உள்ளே பார்த்து உள்ளனர். அப்போது அந்த இடத்தில் ஏழு மலையை கார்த்திக் கத்தியால் வெட்டிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
 
உடனே அருகில் இருந்த பொதுமக்கள் ஒன்று கூடி கார்த்திகை மடக்கி பிடித்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கோட்டகுப்பம் போலீஸ் டிஎஸ்பி உமாதேவி, மரக்காணம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன், சப் இன்ஸ்பெக்டர்கள் திவாகர், ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர். போலீசார் கொலை செய்யப்பட்ட ஏழுமலை உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
 மேலும் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த கொலையாளி கார்த்திகை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக் எனக்கும் ஏழுமலைக்கும் செல்போன் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு தனியாக படுத்திருந்த ஏழுமலையை வெட்டி கொலை செய்ய கத்தியை எடுத்துக்கொண்டு சென்றேன். ஆனால் அருகில் பெரிய கல் இருந்தது. இதனால் அந்தக் கல்லை எடுத்து ஏழுமலையின் தலையில் போட்டேன். இதில் ஏழுமலையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இருந்தும் ஆத்திரம் தீராததால் நான் வைத்திருந்த கத்தியாலேயே ஏழு மலையின் தலையை வெட்டினேன்.
 
அப்போது பொதுமக்கள் பார்த்ததால் என்னை பிடித்து காவல் நிலையத்தில் கொடுத்து விட்டனர். இல்லையென்றால் நான் அவனை கொலை செய்து விட்டு தப்பி இருப்பேன் என கூறி உள்ளான். ஏழுமலையை கார்த்திக் கொடூரமாக கொலை செய்ததற்கு காரணம் செல்போன் பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என போலீசார் தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் தான் தகவல்கள் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர். இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிய நபர் மீது கல்லைப் போட்டும் கத்தியால் வெற்றியும் உடன் இருந்த நண்பனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.