விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் ஆதித்யன்(வயது 45). பா.ம.க. மாவட்ட துணை செயலாளரான இவர், கடந்த 24-ஆம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் பனையபுரத்தில் இருந்து கப்பியாம்புலியூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டி கொலை செய்தனர். இது குறித்து ஆதித்யனின் மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில்   காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மற்றும்  போலீசாரை கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


இந்த கொலை சம்பவம் தொடா்பாக கோலியனூரை சேர்ந்த மெக்கானிக் ராகவன்(வயது 33), மதன்(20), கப்பியாம்புலியூர் ராமு(45), குயில் என்கிற லட்சுமி நாராயணன்(41), வினோத்(33), விஷ்ணு(40), பரந்தாமன்(31) ஆகிய 7 பேரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஆதித்யனை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின..


கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் ராமுவின் டிரைவர் பிரேம்குமார் (20) இறந்தார். மேலும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமு தோல்வி அடைந்தார். இதில் அவருக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதால் ஊரை விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார். மேற்கண்ட சம்பவங்களுக்கு ஆதித்யன்தான் காரணம் என நினைத்து அவர் மீது ராமு தரப்பினருக்கு முன்விரோதம் இருந்து வந்தது. அவரை பலமுறை கொலை செய்ய முயன்றும் நடக்காமல் போனது.


இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வினோத் தனது மகளுக்கு 2-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக நண்பர்களை அழைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில் ராமு உள்ளிட்ட அவரது நண்பர்கள் கலந்து கொண்டு மது அருந்தினர். அப்போது ஆதித்யனை கொலை செய்ய திட்டமிட்டு. அதன்படி சம்பவத்தன்று ஆதித்யன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, ராமு உள்பட 7 பேரும் வழிமறித்து முதலில் நாட்டு வெடிகுண்டை வீசினர். ஆனால் அந்த குண்டு வெடிக்காததால் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆதித்யனை வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றதும் மேற்படி விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து ராமு உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் விக்கிரவாண்டி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.